முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 15

அடுத்துத் தொடரும் இரண்டடிகள் முருகனைப் பற்றி. இன்னும் சரியாகச் சொன்னால், அவன் மாமன் திருமாலைப் பற்றி.

Updated On : 28 செப்டம்பர், 2015 at 5:22 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:21 PM

What is this life if, full of care,

We have no time to stand and stare.

என்று தொடங்கும் ஆங்கிலக் கவிதை உண்டு. வில்லியம் ஹென்றி டேவிஸ் எழுதிய Leisure என்ற கவிதை.

Advertisement

நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், கணப்போது நிற்க நேரம் கிடைத்தால், நம் எல்லோர் மனங்களிலும் கட்டாயம் நம்முடைய குழந்தைப் பருவக் காட்சிகளும், இளம் பருவமும், அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளும் அந்தந்தப் பருவத்து சம்பவங்களும் நினைவில் மின்னி மறையும். பலருக்கு, ‘சரி, இவ்வளவு காலம் வாழ்ந்து என்னதான் செஞ்சோம். எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நிமிஷம் அக்கடான்னு இருக்கமாட்டோமா’ என்று தோன்றும் வாய்ப்பு அதிகம். ‘இந்தப் பிறவிக்கான பயனை அடையமாட்டோமா’ என்ற தாகம் ஒரு சிலருக்காவது எழும். இந்த எண்ண ஓட்டத்தைத்தான், இன்றைய பாடலில் படம்பிடித்துக் காட்டுகிறார் குருநாதர். ஹென்றி டேவிஸ் ஏங்கிய Leisure போலத்தான். ஆனால் இதில் தென்படும் தாகமும் ஏக்கமும் வேறானவை.

தான் பிறந்து வளர்ந்ததை (அல்லது நாம் பிறந்து வளர்ந்ததை) வாழ்ந்த வாழ்வை, அதன்பிறகு திரிந்த விதத்தை எண்ணிப் பார்த்து, உன் அருள் என்றுதான் கிட்டுமோ என்று இரண்டடிகளில் பாடுகிறார்.

அடுத்துத் தொடரும் இரண்டடிகள் முருகனைப் பற்றி. இன்னும் சரியாகச் சொன்னால், அவன் மாமன் திருமாலைப் பற்றி. அதனினும் சரியாகச் சொன்னால், அவன் எடுத்த ராமாவதாரத்தைப் பற்றி. நாம் பிறந்தவிதத்தைப் பாடிய அதே வகையில், ராமாவதாரத்தின் காரணமாக உலகில் வந்து பல உருவங்களில் தோன்றிய தேவர்களைப் பட்டியலிட்டு, இப்படியொரு அவதாரத்தை, தேவர்களும் கூடவந்து பிறக்குமாறு செய்தருளி, அசுரர்களை அழித்த மாமனுக்கு மருகோனே என்று முடிக்கிறார். இப்போது பாடலைப் பாருங்கள்; அதன் ஒலிவடிவைக் கேளுங்கள்.

தனனதந்த தத்தத்த தந்த

தனனதந்த தத்தத்த தந்த

தனனதந்த தத்தத்த தந்த தனதான

கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப்ப யின்று

கடையில்வந்து தித்துக்கு ழந்தை வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த

முலையருந்து விக்கக்கி டந்து

கதறியங்கை கொட்டித்த வழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை

இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை

அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து

பிணியுழன்று சுற்றித்தி ரிந்த

தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி

னரசரென்றும் ஒப்பற்ற உந்தி

யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த

அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும்இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற

அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து

உலகமும்ப டைத்துப்ப ரிந்து

அருள்பரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே
 

இதில், ருத்ரற் சிறந்த அநுமனென்றும் என்று வருகிறது. அநுமன் வாயு குமாரனாயிற்றே, ருத்ரன் அநுமனாய்ப் பிறந்ததாக இந்தப் பாடல் சொல்கிறதே என்று கேட்கத் தோன்றுகிறதா? நாளைக்குப் பார்ப்போம்.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.