முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 222

மனிதன் பிறக்கிறான்.  வளர்கிறான்.  ஆனால் வளர்ச்சி என்பது எதைக் குறிக்கிறது என்ற ஆதாரமான கேள்வியை எழுப்புகிறார் அருணகிரியார்.

Updated On : 19 ஏப்ரல், 2016 at 12:36 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:36 PM

மனிதன் பிறக்கிறான்.  வளர்கிறான்.  ஆனால் வளர்ச்சி என்பது எதைக் குறிக்கிறது என்ற ஆதாரமான கேள்வியை எழுப்புகிறார் அருணகிரியார்.  ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி’ என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலுக்குள் இன்றை திருப்புகழ் பேசும் கருத்தும் ஒளிந்திருக்கிறது.

‘நான் கருவில் உருவானேன்; வளர்ந்தேன்’ என்று சொல்லும் குருநாதர், ‘வயதளவிலே’ என்று அந்த வளர்ச்சியின் தன்மையைச் சொல்கிறார்.  ‘இறைவா நான் வளர்ந்தது வயதளவிலேதான்’ என்றால், எந்தவிதமான மனித முயற்சியும் தேவைப்படாதது ‘வயதளவிலே வளர்வது’.  இன்று தூங்கி நாளை விழித்தால் ஒரு நாள் கழிந்தது.  இப்படி 365 நாள் தொடர்ந்தால் தானாக ஒரு வருட வளர்ச்சி வந்துவிட்டுப் போகிறது.  உயிரைத்தக்கவைத்துக் கொள்ளும் அடிப்படைப் போராட்டத்தைத் தவிர அதற்கென்ன தனிப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது?  இந்தச் சிந்தனையைத்தான் இப்பாடலின் முதலடியிலே முன்வைக்கிறார் இந்தப் பழனித் திருப்புகழில்.  இந்தக் கருத்தை அப்படியே ஒட்டி நடக்கும் திருப்புகழ் ஒன்றைத்தான்—அண்மைக் காலத்தில் கிடைத்தது—நம்முடைய 212ம் தவணையில் பேசியிருந்தோம்.  (“கருவெனு மாயை உருவினில் மூழ்கி”).

இன்றைய பாடல் இன்னொரு வகையிலும் விசேஷமானது.  திருஞான சம்பந்தரைப் பற்றிப் பல பாடல்களில் ‘முருகனுடைய அவதாரம்’ என்றே பாடிய சுவாமிகள், இந்தப் பாடலில் சம்பந்தரையும் ‘கவிராஜ சிங்கம்’ என்று குறிப்பிடுகிறார்.  சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்விலே நடந்த சம்பவத்தையும் குறிப்பிடுகிறார்.  சைவசமயக் குரவர்களில் இருவரை இந்த ஒரே பாடலில் குறிப்பிடுகிறார்.  அதைத் தவிர எப்போதும்போல திருவரங்கத்து எம்மான் புகழையும் தவறாமல் குறிப்பிடுகிறார்.  பாடலைப் பார்ப்போம்.

Advertisement

தனதனன தான தந்த தனதனன தான தந்த

தனதனன தான தந்த                       தனதான

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து

               கலைகள்பல வேதெ ரிந்து         மதனாலே

கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து

              கவலைபெரி தாகி நொந்து          மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று

             அறுசமய நீதி யொன்று              மறியாமல்

        அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று

              அனுதினமும் நாண மின்றி         அழிவேனோ

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்

              உலகளவு மால்ம கிழ்ந்த           மருகோனே

        உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க

              உறைபுகலி யூரி லன்று              வருவோனே

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற

               பரமனரு ளால்வ ளர்ந்த             குமரேசா

       பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று

              பழநிமலை மீதில் நின்ற              பெருமாளே.

</p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.