பகுதி - 434
இந்தத் திருச்செந்தூர்த் திருப்புகழில் கோருகிறார்
வாழ்வின் நெடுகிலும் திருப்புகழ் தவறாமல் நின்று துணைபுரிவதை அன்பர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். ‘உன்னுடைய சொல்லாகிய இந்தத் திருப்புகழ் என்றும் கோடாது; நேர்நின்று துணைபுரியும்’ என்று உலகோர் தாம் உணர்ந்து சொல்லுமாறு அருள வேண்டும் என்று இந்தத் திருச்செந்தூர்த் திருப்புகழில் கோருகிறார். இந்த வாக்கு இறைவனின் வாக்கு என்பதை இந்தப் பாடல் அழுத்தமாகச் சொல்கிறது.
அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகள்; ஒன்று, மூன்று, ஐந்தாம் சீர்களில் ஒற்று நீக்கி இரண்டிரண்டு எழுத்துகள், இரண்டும் நெடில்; இரண்டு, நான்கு ஆறாம் சீர்களில் ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லொற்றும் பயில்கிறது.
தானா தந்தத் தானா தந்தத்
தானா தந்தத் தனதான
Advertisement
ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் - டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் - டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் - குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் - கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் - தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் - பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் - கினியொனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் - பெருமாளே