முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 276

அறுபடை வீடுகளுக்குத் தனித்தனியாகப் பாடல்களை இயற்றிய அருணகிரியார், ஐந்தாம் படைவீடான குன்றுதோறாடலுக்கும்—பல தலங்களையும் பல மலைகளையும்

Updated On : 18 ஜூன், 2016 at 10:45 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:01 PM

அறுபடை வீடுகளுக்குத் தனித்தனியாகப் பாடல்களை இயற்றிய அருணகிரியார், ஐந்தாம் படைவீடான குன்றுதோறாடலுக்கும்—பல தலங்களையும் பல மலைகளையும் தனித்தனியாகப் பாடியிருந்தாலும்—குன்றுதோறும் ஆடுபவனே, பல மலைகளை உடையவனே என்றெல்லாம் விளித்துப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.  இதில் தற்செயலான ஒரு ஆச்சரியம் ஐந்தாம் படைவீட்டுக்கென்று இயற்றப்பட்டுள்ளவை ஐந்து பாடல்களே! 

இன்றைய பாடல், நாயகி பாவத்தில் நற்றாய் இரங்கல் என்ற வகையைச் சேர்ந்தது.  ‘என் மகள் உன்மீது மோகம் கொண்டு துன்பப்படுகிறாளே, இவள் இப்படித் துன்பப் படலாமா’ என்ற வகையில் இந்த நற்றாய் இரங்கல் நடக்கும்.  நாயகி பாவத்தை மேற்கொண்டு பேசுவதால், இதனை ‘அடியவளான இவளை—அடியார்களையெல்லாம்—ஆட்கொண்டருள வேண்டும்’ என்று பொருள் கொள்வது சிறப்பு.

ஒவ்வோரடிக்கும் இருபத்தைந்து எழுத்துகள் உள்ள இப்பாடலில் இருபத்து நான்காம் எழுத்து ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் குறில்.  இருபத்து நான்காம் எழுத்து மட்டும் நெடில். இன்னொன்று.  இந்தப் பாடலில் இடையின மெய்கள் மட்டுமே பயில்கின்றன.  எந்த ஒற்றெழுத்தும் வல்லினமோ மெல்லினமோ கிடையாது.  தமிழிலக்கியத்தின் நெடும்பரப்பில் பற்பல கவிஞர்கள் எத்தனையோ சந்தங்களில் பாடல்கள் இயற்றியிருந்தாலும், இத்தனைவிதமான, இத்தனை துல்லியமான வகையில் பாடுவது அருணகிரியாரிடமிருந்துதான் தொடங்குகிறது.  இவருக்குப் பிறகு மதுரகவி சீனிவாச ஐயங்கார் இந்த நடையைப் பின்பற்றினார்.  அருட்கவி சேதுராமன் என்ற சாதுராம் சுவாமிகள் அண்மைக் காலத்தில் இந்தத் துல்லியமான நடையைக் கையாண்டவர்.  தற்காலத்தில் இந்தவகையான வண்ணவிருத்தங்களை வெகு துல்லியமாகவும் இயல்பாகவும் அழகாகவும் கையாள்பவர்களில் ஓவியக் கவிஞர் சு ரவியும், ஓவியக் கவிஞர் நடிகர் எனப் பன்முகங்களைக் கொண்ட கிரேசி மோகன் அவர்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.  இந்த முரட்டுக் குதிரையை இவர்கள் அடக்கியாளும் விதம் பாராட்டத்தக்கது.

Advertisement

தனதன தனன தனதன தனன
      தனதன தனன                       தனதான

எழுதிகழ் புவன நொடியள வதனி
         லியல்பெற மயிலில்               வருவோனே
      இமையவர் பரவி யடிதொழ அவுணர்
         மடிவுற விடுவ                    தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
         வழிபட மொழியு                  முருகேசா
      மலரடி பணியு மடமகள் பசலை
         மயல்கொடு தளர்வ                தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
         முறுகிடு பவள                    மிகவாரி
      முறையொடு குறவர் மடமகள் சொரியு
         முதுமலை யழக                  குருநாதா
      பழகிய வினைகள் பொடிபட அருளில்
         படிபவ ரிதய                      முறுகோவே
      பருவரை துணிய வொருகணை தெரிவ
         பலமலை யடைய                 பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/269699486&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.