பகுதி - 412
இன்றைய பாடல் தென்னாற்காடு மாவட்டத்தில் ‘தேவனூர்’ என்ற தலத்துக்கானது.
இன்றைய பாடல் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவிலும்; திருக்கோவிலூருக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவிலுமுள்ள ‘தேவனூர்’ என்ற தலத்துக்கானது. பற்றுகளும் ஆசைகளும் தொலையவேண்டும் எனக் கோருகிறது. முதலடியில் வரிசையாக எண்கள் சொல்லப்பட்டாலும், அதிலுள்ள அத்தனை எண்களையும் கூட்டினால் கூட்டுத்தொகை 96 என்று வரும். தொண்ணூற்றாறு தத்துவங்களைப் பற்றித் அந்த சிக்கலான கணக்காகத் தோன்றும் முதலடியில் பேசுகிறார்.
அடிக்கு ஒற்று நீக்கி 28 எழுத்துகள்; 1, 2, 5, 6, 9, 10 ஆகிய சீர்களின் முதலெழுத்துகள் நெடில்; 3, 4, 7, 8, 11, 12 ஆகிய சீர்களின் இரண்டாம் எழுத்து மெல்லொற்று என்ற அமைப்பு.
தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த - தனதான
Advertisement
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் - அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆர ணாக மங்க டந்த - கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி - யொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்று - பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வந்த
வாரி மேல்வெ குண்ட சண்ட - விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு - பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் - புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த - பெருமாளே.