முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 523

கயிலையின் நாதனாகிய சிவனார் மகனே

Updated On : 1 ஏப்ரல், 2017 at 5:56 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:40 PM

பதச் சேதம்

சொற் பொருள்

தசையாகிய கற்றையினால் முடிய தலை கால் அளவு ஒப்பனையாயே

Advertisement

 

தசை: மாமிசம்; கற்றை: கூட்டம், திரட்சி; தலை கால் அளவும்: தலையிலிருந்து கால் வரை; ஒப்பனையாயே: அலங்காரமாகவே;

தடு மாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன்

 

தவிரா(த): ஒழிக்காத, விடாத;

பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு பூரண நிட்களமான

 

பசு: அகங்காரம்; பாசம்: பந்தம்; நிட்களம்: நிஷ்களம், உருவமற்றது;

பதி பாவனை உற்று அநுபூதியில் அப்படியே அடைவித்து அருள்வாயே

 

பதி: பரம்பொருள்; பதிபாவனை: பரம்பொருளை தியானித்து; அடைவித்து: அடையச் செய்து;

அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே

 

அசலேசுரர்: அசல ஈஸ்வரர், கயிலை மலைக் கடவுள்; குண திக்கு: கிழக்கு திசை; அருணோதயம்: (சூரியனுடைய தேரோட்டி அருணன் ஆகவே) சூரியோதயத்துக்கு முன்னாலே தோன்றும் ஒளி;

அகில ஆகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா

 

அகில ஆகம: எல்லா ஆகமங்களிலும்; வித்தகனே: வல்லவனே; துகள் அற்றவர்: குற்றமற்றவர்; வயலி: வயலூர்;

கசிவார் இதயத்து அமிர்தே மதுப(ம்) கமலாலயன் மைத்துன வேளே

 

கசிவார்: உருகுபவர்கள்; மதுபம்: வண்டு; கமலாலயன்: கமலத்தில் வீற்றிருப்பவனான பிரமன்;

கருணாகர சற் குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே.

 

கருணாகர: கருணை வடிவினனே; குடகு: மேற்கு;

தசையாகிய கற்றையினால் முடிய தலைகால் அளவு ஒப்பனையாயே... சதைத் திரட்சியாலே தலையிலிருந்து கால்வரைக்கும் அலங்காரமாகவே புனையப்பட்டு,

தடுமாறுதல் சற்று ஒருநாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன்.. உலகத்திலே ஒருநாளும் தடுமாற்றம் அடைவதை ஒழிக்காத இந்த உடலைச் சுமப்பவனாகிய நாயைப்போன்ற அடியேன்,

பசுபாசமும் விட்டு அறிவால் அறிய படுபூ ரண நிட்களமான... அகங்காரத்தையும், இறுகப் பிணிக்கின்ற பந்தங்களையும் ஒழித்து, அறிவால் அறியப்படுவதும்; பரிபூரணமானதும்; உருவமற்றதுமான,

பதிபாவனை உற்று அநுபூ தியில் அப்படியே அடைவித்து அருள்வாயே... பரம்பொருளைச் சிந்தித்து, தியானத்தில் ஆழ்ந்து, அப்படிப்பட்ட அனுபவ ஞானத்திலிருந்து என்றென்றும் மீளாத வையில் என்னைச் சேர்ப்பித்து அருள வேண்டும்.

அசலேசுரர் புத்திரனே குணதிக்கு அருணோதய முத்தமிழோனே... கயிலை மலை நாதனான பரமேசுரருடைய மகனே!  கிழக்கு திசையிலே சூரியோதயத்துக்கு முன்னாலே தோன்றும் சிவந்த ஒளியே!  முத்தமிழ்க் கடவுளே!

அகில ஆகம வித்தகனே துகளற்றவர்வாழ் வயலித்திருநாடா... சகல வேதங்களிலும் ஆகமங்களிலும் வல்லவனே!  குற்றமற்றவர்கள் வாழ்கின்ற வயலூர் திருத்லத்திலே வீற்றிருப்பவனே!

கசிவார் இதயத்து அமிர்தே மதுபக் கமலா லயன்மைத்துனவேளே... (உன்னை நினைத்து) மனம் உருகுபவர்களுடைய உள்ளத்திலே ஊறும் அமுதமே!  வண்டுகள் மொய்க்கின்ற தாமரைப் பூவை ஆசனமாக உடைய பிரமனுடைய மைத்துனனே!  அரசே!

(பிரமன் திருமால் மருகன் என்பதாலும்; முருகன் திருமாலின் மருகன் என்பதாலும் முருகனுக்கு பிரமன் மைத்துனன் உறவு.  நாரதரும் அப்படியே.)

கருணாகர சற்குருவே குடகிற் கருவூர் அழகப் பெருமாளே... கருணையே வடிவானவனே!  சற்குருவே!  மேற்கிலே உள்ள கருவூரிலே வீற்றிருக்கின்ற அழகுப் பெருமாளே! 

சுருக்க உரை

கயிலையின் நாதனாகிய சிவனார் மகனே!  கிழக்கிலே சூரியோதயத்துக்கு முன்னாலே தோன்றும் சிவந்த ஒளியே!  முத்தமிழ்க் கடவுளே!  சகல வேதங்களிலும் ஆகமங்களிலும் வல்லவனே!  குற்றமற்றவர்கள் வாழ்கின்ற வயலூரில் வீற்றிருப்பவனே!  மனம் உருகுபவர்களுடைய உள்ளத்திலே ஊறுகின்ற அமுதமே!  வண்டு மொய்க்கின்ற தாமரையை ஆசனமாய் உடைய பிரமனின் மைத்துனனே!  அரசே!  கருணையே வடிவெடுத்தவனே!  சற்குருவே!  மேற்கே உள்ள கருவூரில் வீற்றிருக்கின்ற அழகிய பெருமாளே!

தலையிலிருந்து கால்வரைக்கும் மாமிசத்தால் அலங்கரிக்கப்பட்டதும்; சஞ்சலமடைந்து தடுமாறுவதை ஒருநாளும் நீங்காததுமான இந்த உடலைச் சுமந்திருக்கின்ற அடியேன்,

அகங்காரத்தையும், பாசக்கட்டுகளையும் ஒழித்து; ஞானத்தால் அறியப்படுவதும்; பூரணமானதும்; உருவமற்றதுமான பரம்பொருளை தியானித்து; அந்த அனுபவத்தால் அடையும் ஞானநிலையிலிருந்து மீளாதவண்ணம் அப்படியே நிலைத்திருக்குமாறு என்னைச் சேர்ப்பித்து அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.