பகுதி - 525
பஞ்சமகா பாதகங்களும் குடியிருப்பதும்
பதச் சேதம் | சொற் பொருள் |
பஞ்ச பாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட(ம்) மதர் விழி பிலவக பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம் Advertisement
| பஞ்சபாதகம் உறு: பஞ்சமகா பாதகங்களும் குடிகொண்டதைப் போல; பிறை எயிறு: பிறைச் சந்திரனைப் போல வளைந்த பல்; எரி குஞ்சி: தீயைப் போல சிவந்த தலைமயிர்; பிலவக(ம்): குரங்கு; பங்க: பயங்கரமான; முடுகிய: விரைந்து செல்லும்; நெடுகிய: நீண்ட; |
பந்த பாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு பண்பி(ல்)லாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன்
| பந்த பாசம்: கட்டுவதற்காக வைத்திருக்கும் கயிறு; பண்பில்லாத: அழகற்ற; பகடு: எருமைக்கடா; |
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள் பெறும் அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ
| அவதரம்: அச்சமயத்தில்; |
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும்
| கோளகை: முகடு; திசாமுகம்: திசைகளின் பக்கங்கள்; மடமட நடமிடும்: மடமடவென ஒலியெழும்படி நடனமாடும்; மோகர: உக்கிரம் என்றும் மனத்துக்கினிய (மோகன) என்றும் பொருளுண்டு—இங்கே உக்கிரம்; |
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும்
| மஞ்சு: மேகம்; அளகம்: கூந்தல்; இளகிய: மென்மையான; ரஞ்சித: இன்பகரமான; வசனமும்: பேச்சும்; |
மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர் தம் மடமகள் தட முலை மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா
| மன்றல்: நறுமணம்; வாரிச(ம்): தாமரை; |
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு | செஞ்சொல் மாதிசை: செம்மை நிறைந்த சொல் எனப்படும் தமிழ் பேசப்படும் தென்திசை; குடதிசை: மேற்கு; வேணியர்: சடாமகுடத்தை உடையவர்; தளி: ஆலயம்; மகமேரு: மகா மேரு; |
செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே.
|
|
பஞ்ச பாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட(ம்) மதர் விழி.. (கொலை, களவு, பெய், மதுவருந்தல், குருநிந்தனை ஆகிய) ஐந்து மகாபாதகங்களும் குடியிருப்பது போன்றதும்; பிறை நிலவைப் போல வெளுத்ததும் வளைந்ததுமான பல்லும்; தீயைப் போல சிவந்த தலைமயிரும்; கொடிய நஞ்சு ததும்புகின்ற கண்களும்;
பிலவக பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம்... குரங்கை ஒத்ததும் பயங்கரமானதுமான ஒளிபொருந்திய முகமும்; விரைந்து செல்வதும் நீண்டதுமான திரிசூலமும்);
பந்த பாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன்... கட்டுவதற்கான கயிற்றைப் பிடித்த கையும்; மிகப்பெரிய கரிய மேகத்தைப் போன்ற உருவமும் கொண்டு அழகற்ற எருமைக்கடாவின் மீது ஏறி வருபவனான யமராஜன்;
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ... நான் அச்சம் கொள்ளும்படியாக வருகின்ற அந்த நேரத்திலே; பல தலைமுறைகளாக (உன்னையே) ஒப்பற்ற அடைக்கலமாகக் கொண்டு உன்னுடைய திருவருளைப் பெறவேண்டி உனது திருவடிகளைப் புகழ்கின்ற அடிமையான என் எதிரிலே நீ;
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும் அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும்... அண்டத்தின் உச்சி வெடித்துச் சிதறும்படி இடிபட்டு; எட்டுத் திசைகளும் மடமடவென நொறுங்கும்படியாக நடனம்புரிகின்ற உக்கிரமான மயிலின்மேல் ஏறிக்கொண்டு அன்போடு வரவேண்டும்.
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என வந்த தூய வெண் முறுவலும்... கார்மேகத்தைப் போல நீண்டிருக்கின்ற கூந்தலையும்; மென்மையானதும் இன்பமானதும் அமிர்தம்போன்றதமான பேச்சையும்; நிலவைப் போல பிரகாசிக்கும் பரிசுத்தமும் வெண்மையும் நிறைந்த பற்களையும்;
இருகுழை அளவோடும் மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர் தம் மடமகள் தடமுலை மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா... குழையணிந்த இரண்டு செவிகளைத் தொடும்படியாக நீண்டுள்ளதும்; நறுமணம் கமழும் தாமரையைப் போன்றதுமான கண்களையும் உடையவளும்; அழகான மலையின்மேல் வசிக்கின்ற வேடர்களுடைய இளமகளுமான வள்ளியின் பருத்த, மந்தர மலைபோன்ற மார்பகங்களின்மீது துயில் கொள்கின்ற அழகனே! மணவாளனே!
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து... தமிழ் பேசப்படுவதான தென்திசை, வடதிசை, மேற்கு திசை, கிழக்கு திசை என்று எல்லாத் திசைகளிலும் போர்புரிந்தவரும்;
திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு செண்டு மோதினர் அரசருள் அதிபதி... பிறைச் சந்திரனை அணிந்த சடாமகுடத்தை உடையவருமான சிவபெருமானைப் பல கோவிகளில் தொழுது; பெரிய மேரு மலையைச் செண்டால் புடைத்த சக்கரவர்த்தியே*!
(* முருகன் உக்கிர குமார பாண்டியனாக அரசாண்ட போது பொன்னைப் பெறவேண்டி, பொன்மயமான மேருமலையைச் செண்டு கொண்டு புடைத்ததைக் குறிக்கிறது.)
தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே... பல தலைமுறைகளாக அன்பு பூண்டிருந்த தொண்டர்கள் அனைவரும் முக்தி பெறும்படிய அருளியதான திருச்செந்தூரில் இனிதே வீற்றிருக்கின்ற தேவர்கள் பெருமாளே!
சுருக்க உரை
கரிய மேகத்தைப் போல நீண்டள்ள கூந்தலையும்; மென்மையானதும் இன்பகரமானதும் அமுதத்தை ஒத்ததுமான பேச்சையும்; நிலவைப் போல மின்னுகின்ற தூய வெண் பற்களையும்; காதளவு ஓடியதும்; தாமரையைப் போன்றதுமான கண்களையும் கொண்டவளும்; மலையிலே வாழ்கின்ற வேடர்குலத்தில் வந்தவளுமான வள்ளியின் மார்பகத்தில் துயில்கொள்கின்ற மணாளனே! தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்று எல்லாத் திசைகளிலும் போர்புரிந்தவரும்; நிலவைச் சூடியவருமான சிவனாருடைய பல ஆலயங்களிலும் தொழுது; மேருமலையைச் செண்டால் புடைத்த சக்கரவர்த்தியே! பல தலைமுறைகளாக அன்பு பூண்டிருப்பவர்களான அனைத்துத் தொண்டர்களும் முக்திபெறுமாறு அருளியதான திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
பஞ்சமகா பாதகங்களும் குடியிருப்பதும்; பயங்கரமானதும்; பிறைச் சந்திரனைப் போல வளைந்ததுமான பற்களையும்; தீயை ஒத்த தலைமயிரையும்; கொடிய விஷம் ததும்புகின்ற கண்களையும்; குரங்கு போன்றதும்; பயங்கரமானதும்; ஒளிவீசுவதுமான முகத்தையும்; விரைந்து பாய்வதும் நீண்டதுமான திரிசூலத்தையும்; கட்டுவதற்காக வைத்திருக்கின்ற பாசக் கயிற்றையும் கொண்டு கரிய மேகம்போன்ற பெரிய உருவத்தோடு எருமைக் கடாவின் மீது யமராஜன் ஏறிவருகின்ற சமயத்திலே, உன்னையே பல தலைமுறைகளாகத் தஞ்சமென அடைந்து உன்னுடைய திருவருளைப் பெறும் விருப்பத்தோடு உன்னுடைய திருவடிகளை துதிக்கின்ற அடிமையாகிய என் எதிரிலே நீ,
அண்டங்களின் உச்சி வெடிபட்டு இடிபடுமாறும்; எட்டுத் திசைகளும் மடமடவென்று நொறுங்கி வீழுமாறும் நடமாடுகின்ற அந்த உக்கிரமான மயிலின்மேல் ஏறிக்கொண்டு அன்போடு வந்தருள வேண்டும்.