பகுதி- 718
என்னை அடிமைகொண்டு ஆண்டருளவேண்டும்
‘என்னை அடிமைகொண்டு ஆண்டருளவேண்டும்’ என்று கோருகின்ற இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் ஒரு நெடிலைக் கொண்ட மூன்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் கொண்டவை.
தந்ததன தானதன தத்தான
தந்ததன தானதன தத்தான
தந்ததன தானதன தத்தான தனதான
Advertisement
சந்தனச வாதுநிறை கற்பூர
குங்குமப டீரவிரை கத்தூரி
தண்புழுக ளாவுகள பச்சீத வெகுவாச
சண்பகக லாரவகு ளத்தாம
வம்புதுகி லாரவயி ரக்கோவை
தங்கியக டோரதர வித்தார பரிதான
மந்தரம தானதன மிக்காசை
கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
வஞ்சகவி சாரஇத யப்பூவை யனையார்கள்
வந்தியிடு மாயவிர கப்பார்வை
அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
வந்தடிமை யாளஇனி யெப்போது நினைவாயே
இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
சம்ப்ரமம யூரதுர கக்கார
என்றுமக லாதஇள மைக்கார குறமாதின்
இன்பஅநு போகசர சக்கார
வந்தஅசு ரேசர்கல கக்கார
எங்களுமை சேயெனரு மைக்கார மிகுபாவின்
செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
குன்றெறியும் வேலின்வலி மைக்கார
செஞ்சொலடி யார்களெளி மைக்கார எழில்மேவும்
திங்கள்முடி நாதர்சம யக்கார
மந்த்ரவுப தேசமகி மைக்கார
செந்தினகர் வாழுமரு மைத்தேவர் பெருமாளே.