முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி  - 463

மனம் மகிழ்கின்ற குமரனே என்று

Updated On : 27 ஜனவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர்

Advertisement

 

அரி: திருமால்; அயன்: பிரமன்; எரி: தீயை; புரமூணு: மூன்று புரங்களிலும் (திரிபுரங்களில்); புக: புகுமாறு; நகை ஏவிய நாதர்: தன் சிரிப்பை ஏவியவரான தலைவர்;

அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர்

 

அவிர்: விளங்குகின்ற; வனிதையர்: கங்கையாகிய பெண்ணை (வைத்தவர்); பதி: தலைவர்; அழலையும்: நெருப்பையும் மழு: கோடரியையும்;

வரை மகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர்

 

வரைமகள்: மலை மகளான உமாதேவி; ஒருகூறு உடையவர்: இடது பாகத்திலே கொண்டவர்; மதன் ஆகமும்: மன்மதனுடைய உடலும்;

மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலரடி தொழுமாறு அருள்வாயே

 

 

அருவரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே

 

அருவரை: அரிய (கிரெளஞ்சமாகிய) மலை;

அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில் தனை விசையாய் விடுவோனே

 

அமரர்கள்: தேவர்களை; இகல்: பகைத்த; நீடு அசுரர்கள்: பெரிய அரக்கர்கள்; அயில்: வேல்; விசையாய்: வேகமாக;

வரிசையொடு ஒரு மாதினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா

 

வரிசையொடு: வரிசையாக;

மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே.

 

மருவி: பொருந்தி;

அரியயன் அறியாதவர்... திருமாலாலும் பிரமனாலும் (அடியையும் முடியையும்) கண்டறிய முடியாதவரும்;

எரி புரமூணு அதுபுக நகை ஏவியநாதர்... முப்புரங்களிலும் தீ புகுமாறு தன் சிரிப்பை ஏவிய தலைவரும் (சிரித்தே புரமெரித்தவரும்);

அவிர்சடை மிசையோர் வனிதையர் பதி சீறழலையும் மழுநேர்பிடிநாதர்... விளங்குகின்ற சடையின் மேலே கங்கையாகிய பெண்ணை வைத்தவரும்; தலைவரும்; சீறுகின்ற தழலையும் கோடரியையும் கையிலே நேராக ஏந்திய தலைவரும்;

வரைமக ளொருகூ றுடையவர் மதன ஆகமும்விழ விழியேவியநாதர்... மலைமகளாம் உமாதேவியை ஒரு பாகத்திலே வைத்தவரும்; மன்மதனுடைய உடல் சாம்பலாக விழும்படியாக நெற்றிக் கண்ணைத் திறந்து அக்கினியை ஏவிய தலைவருமான சிவபிரான்,

மனமகிழ் குமரா என உனது இருதாள் மலரடி தொழுமாறு அருள்வாயே... மனம் மகிழ்கின்ற குமரனே என்று சொல்லி உன்னுடைய இரண்டு மலர்ப் பாதங்களையும் தொழுகின்ற பேற்றை அருள்வாயாக. 

அருவரை யிருகூ றிட ஒருமயில்மேல் அவனியை வலமாய் வருவோனே... அரிய மலையான கிரெளஞ்சத்தை இரண்டாகப் பிளக்கச் செய்து; ஒப்பற்ற மயிலின் மேல் ஏறிக்கொண்டு உலகத்தை வலம் வந்தவனே!

அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிரமேல் அயில்தனை விசையாய் விடுவோனே... தேவர்களுடைய பகைவர்களான பெரும் அசுரர்களின் தலையின் மேலே தைக்கும்படியாக வேலை விசையோடு வீசியவனே!

வரிசையொடு ஒருமா தினைதரு வனமே மருவியொர் குறமாது அணைவேடா... தினைப் பயிர் வரிசையாக வளருகின்ற தினைப்புனத்தில் (பிறந்தவளான) வள்ளியம்மை (வாழுகின்ற) வனத்துக்குச் சென்று அந்தக் குறப்பெண்ணை அணைத்தவனே!  வேடனாக வந்தவனே! 

மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் பெருமாளே... எல்லா மலைகளிலும் மகிழ்ந்து வீற்றிருப்பவனே!  வடுகூர் என்ற தலத்துக்கு வருகின்ற முனிவரகளுடைய பெருமாளே! 

சுருக்க உரை

அரியதான கிரெளஞ்ச மலையை இரண்டாகப் பிளந்ததவனே!  மயிலின்மேல் ஏறிக்கொண்டு உலகங்களை வலம் வந்தவனே!  தேவர்களோடு பகைமை பாராட்டிய பெரிய அரக்கர்களின் தலையின் மேலே தைக்கும்படியாக வேலாயுதத்தை விசையோடு செலுத்தியவனே!  விரிசையாக நிற்கும் தினைப்பயிர் வளருகின்ற புனம் தருவதான வள்ளியம்மை வாழுகின்ற காட்டுக்குச் சென்று அவரை அணைத்தவனே!  வேடனாக வந்தவனே!  மலைகளைக் கண்டு மனம் மகிழ்ந்து அங்கே வீற்றிருப்பவனே!  வடுகூர்த் தலத்துக்கு வருகின்ற தவமுனிவர்களுடைய பெருமாளே!

திருமாலும் பிரமனும் அறியமுடியாத அடியையும் முடியையும் கொண்டவரும்; திரிபுரங்களும் எரிந்துபோகும்படியாகத் தன் சிரிப்பை ஏவியவரும்; சடையின் மேலே கங்கையை வைத்தவரும்; தலைவரும்; சீறுகின்ற தழலையும் கோடரியையும் கையிலே ஏந்தியவரும்; மலைமகளான உமையம்மையை ஒருபாகத்திலே வைத்தவரும்; மன்மதனுடைய உடல் சாம்பலாக விழும்படியாகத் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து அக்கினியைச் செலுத்தியவருமான தலைவரான சிவபெருமான் மனம் மகிழ்கின்ற குமரனே என்று துதித்து உன்னுடைய மலர்ப்பாதங்களைத் தொழும்படியான பேற்றைத் தந்தருளுவாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.