பகுதி - 518
திருச்செங்கோட்டுத் தலத்துக்கானது
நரகத்தில் விழாமல் ஆட்கொண்டருள வேண்டுகின்ற இந்தப் பாடல் திருச்செங்கோட்டுத் தலத்துக்கானது. திருச்செங்கோட்டுக்கு நாகமலை, சர்ப்பகோத்ரம் என்றெல்லாம் பல பெயர்களுண்டு.
அமைப்பு முறையில் பார்ப்பதற்கு எளிமையானதாகவும் படிப்பதற்கு அருமையானதாகவும் விளங்கும் இந்தப் பாடல் பல வகையுளிகளையும் சிலேடைகளையும் உள்ளடக்கியது. ஒவ்வோரடியிலும் முதற் சீரும் மூன்றாம் சீரும் ஐந்தாம் சீரும் எதுகையாக அமைவதைக் காணலாம். முதற் சீரில் –த்து என்று இருந்தால் மூன்றிலும் ஐந்திலும் –த்து என்றே இருப்பதையும்; --த்தி என்று வருகின்ற இடங்களில் மூன்றாம் ஐந்தாம் சீர்களிலும் –த்தி என்று அமைவதையும்; --த்தை என்று வருகின்ற மூன்றாமடியின் மடக்கில் ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய மூன்று சீர்களிலும் –த்தை என்றே இருப்பதையும் பார்க்கலாம். முற்றிலும் வல்லொற்றுகளைக் கொண்ட பாடல் (இடையொற்றுகள் சந்தத்துக்குக் குறுக்கிடுவதில்லை என்பதைப் பலமுறை பார்த்துள்ளோம்.)
அடிக்கு ஒற்று நீக்கி 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒற்று நீக்கி இரண்டெழுத்துகளைக் கொண்டவை; இரண்டாவது எழுத்து தவறாமல் ‘த்’ என்ற வல்லொற்றாக மட்டுமே (க், ச், ட் போன்ற மற்ற வல்லொற்றுகள் வராமல்) அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஐந்தெழுத்துகளைக் கொண்டவை. பாடலில் (தொங்கல் சீரைத் தவிர்த்து மற்ற) எல்லா எழுத்துகளும் குறில்.
தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன தனதான
அத்து கிரினலத ரத்து அலனவள
கத்து வளர்செய்புள கிதபூத
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு நெடுமாம
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி பகராதே
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை
யத்தி னிடையடிமை விழலாமோ
தத்து கவனவரி ணத்து வுபநிடவி
தத்து முநியுதவு மொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப னிருதோளா
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுணர் குலநாகந்
தத்து மிசைமரக தத்த மணியமயில்
தத்த விடுமமரர் பெருமாளே.
Advertisement