பகுதி - 548
எந்தவிதமான வேண்டுதலும் இல்லாமல் இறைவனிடம் பக்தி செலுத்த
இறைவனை வணங்குகிறோம் என்றால் அவனிடம் ஏதேனும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பதில்லை. எந்தவிதமான வேண்டுதலும் இல்லாமல் இறைவனிடம் பக்தி செலுத்த முடியுமானால் அது உயர்வான பக்தி. அப்படி, எதையும் வேண்டாமல் முழுக்க முழுக்கத் துதிமொழிகளாகவே நடக்கும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 30 எழுத்துகளைக் கெண்ட பாடல் என்று சொன்னாலும் ஆங்காங்கே தட்டுப்படும் இடையின ஒற்றுகளைத் தவிர வல்லினமாகவோ மெல்லினமாகவோ எந்த ஒற்றும் (தொங்கல் சீரைத் தவிர்த்து) பயிலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் முற்றிலுமே குற்றெழுத்துகளால் நடக்கும் இவ்வகைப் பாடல்களைக் ‘குறுவண்ணம்’ என்று குறிப்பார்கள். எல்லாச் சீர்களிலும் (ஆங்காங்கே தட்டுப்படும் இடையின மெய் ஒழித்து) நான்கு நான்கு எழுத்துகளாக அமைந்துள்ள பாடல்.
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அனலென எழவிடு மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர முநிவோரும்
பரவி முனநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு பெருமாளே.