முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 551

பேரோசையோடு போருக்கு எழுந்து வந்த

Updated On : 8 மே, 2017 at 4:42 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:58 PM

பதச் சேதம்

சொற் பொருள்

குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான

Advertisement

 

கரி: யானை, யானைமுகன்; கரிபிறகான: யானைமுகனுக்கு அடுத்த;

குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று

 

குழக(ன்): இளையவன்; சிவசுதன்: சிவன் மகன்; சிவய நம என: சிவய நம (என்னும் ஐந்தெழுத்துக்கு) உரிய; குரவன்: குரு;

அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும்

 

திமிர்தம்: பேரொலி;

அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ

 

அமலை: ஆரவாரம்; வினைகொடும்: வினையைக் கொண்டு, வினை நீங்குவதற்காக;

திமிர எழுகடல் உலக(ம்) முறிபட திசைகள் பொடிபட வரு சூரர்

 

திமிர(ம்): இருண்ட;

சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா

 

உயிர் திறைகொடு: உயிரைக் கப்பமாக வசூலித்து; அமர்: போர்;

நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா

 

நமனை உயிர்கொளும்: யமனுடைய உயிரைக் கவரும் (செயலை அழித்த கால சம்ஹார மூர்த்தி);

நளின குரு மலை மருவி அமர் தரு நவிலு(ம்) மறை புகழ் பெருமாளே.

 

நளின: குளிர்ச்சியான (தாமரை என்றும் பொருள்); குருமலை: சுவாமி மலை;

குமர குருபர முருக சரவண குக சண்முக... குமரா! குருபரா! முருகா! சரவணா! குகா! சண்முகா!

கரி பிறகான குழக சிவசுத... யானைமுகனான விநாயகனுக்கு அடுத்ததாகப் பிறந்த இளையவனே! சிவகுமாரனே!

சிவய நமவென குரவன் அருள் குருமணியே யென்று... சிவய நம என்னும் ஐந்தெழுத்துக்கு உரிய குருவான சிவன் அருளிய குருமணியே என்றெல்லாம்,

அமுத இமையவர் திமிர்தம் இடுகடலதென அநுதினம் உனையோதும்... தேவர்கள் அமுதத்தைக் கடைந்த கடலுடைய ஓசையைப்போல ஒவ்வொரு நாளும் உன்னைப் போற்றி,

அமலை அடியவர் கொடிய வினைகொடும் அபய மிடுகுரல் அறியாயோ...  பேரோசையை எழுப்பும் அடியவர்கள், தங்களுடைய கொடிய வினை நீங்குவதற்காக ‘அபயம், அபயம்’ என்று கதறுகின்ற குரலோசை உனக்குக் கேட்கவில்லையோ?

திமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட... இருளின் வண்ணமாகக் கறுத்திருக்கின்ற ஏழு கடல்களும் உலகங்களும் அழியுமாறும்; எட்டுத் திசைகளும் பொடிபடுமாறும்

வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழ உயிர் திறைகொடு அமர்பொரும் மயில்வீரா... போருக்கு எழுந்த சூரர்களுடைய தலையும் உடலும் பூமியிலே விழும்படியாக அவர்களுடைய உயிரைக் கவர்ந்து போரிட்ட மயில் வீரனே!

நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல் நதிகொள் சடையினர் குருநாதா...  யமனுடைய உயிரைப் பறித்த தீயையை ஒத்த இரண்டு திருப்பாதங்களையும்; கங்கை நதியைத் தாங்கிய சடாமுடியையும் உயை சிவனாருடைய குருநாதனே!

நளின குருமலை மருவி யமர்தரு நவிலு மறைபுகழ் பெருமாளே... குளிர்ச்சி நிறைந்த சுவாமி மலையில் வீற்றிருப்பவனே!  ஓதப்படும் வேத முழக்கங்களால் புகழப்படுகின்ற பெருமாளே!

சுருக்க உரை

இருண்டதான ஏழு கடல்களும் உலகங்களும் எட்டுத் திசைகளும் இடிபடும்படியாகப் பேரோசையோடு போருக்கு எழுந்து வந்த சூரர்களுடைய தலையும் உடலும் பூமியில் கிடக்குமாறு அவர்களுடைய உயிர்களைக் கவர்ந்து போரிட்ட மயில் வீரனே!  யமனுடைய உயிரைப் பறித்த; தீயை ஒத்த திருப்பாதங்களையும்; கங்கையைத் தாங்கும் சடாமுடியையும் உடைய காலசம்ஹார மூர்த்தியான சிவனாருடைய குருநாதனே!  குளிர்ச்சியான சுவாமி மலையில் முழங்குகின்ற வேதகோஷங்களால் புகழப்படும் பெருமாளே!

குமரா! குருபரா! முருகா! சரவணா! குகா! சண்முகாயானைமுகனுக்கு அடுத்தவனாகத் தோன்றிய இளையவனே! ‘சிவயநம’ என்னும் பஞ்சாட்சரத்துக்கு உரிய குருவான சிவபிரான் அளித்த குருமணியே!’ என்றெல்லாம் தேவர்கள் அமுதத்தைக் கடைந்தபோது கடல் எழுப்பிய ஓசையைப் போல, தங்களுடைய கொடிய வினை தீர்வதற்காக உன்னுடைய அடியார்கள் ‘அபயம், அபயம்’ என்று அலறுகின்ற பேரொலியை நீ அறியாயோ!  (சூரர்கள் இட்ட பெருங்கூச்சலும்; உலகங்களும் திசைகளும் முறிபடும்படியாக நீ வீசிய வேலால் எழுந்த பேரோசையும் உன் காதுகளில் விழுமென்றால், அதற்கு இணையாக பக்தர்கள் எழுப்புகிற அபயக் குரல்தானா உன் காதில் விழாமல் போய்விடப் போகிறது!  அடியார்களுடைய முறையீடுகளுக்குப் பலனுண்டல்லவா!)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.