பகுதி - 892
எனது கலி நீங்கப்பெற
‘எனது கலி நீங்கப்பெற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனன தனதன தனன தனதன
Advertisement
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன தனதான
கமரி மலர்குழல் சரிய புளகித
கனக தனகிரி யசைய பொருவிழி
கணைக ளெனநுதல் புரள துகிலதை நெகிழ்மாதர்
கரிய மணிபுர ளரிய கதிரொளி
பரவ இணைகுழை யசைய நகைகதிர்
கனக வளைகல நடைகள் பழகிகள் மயில்போலத்
திமிரு மதபுழு கொழுக தெருவினி
லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
திலத மணிமுக அழகு சுழலிக ளிதழூறல்
திரையி லமுதென கழைகள் பலசுளை
யெனவு மவர்மயல் தழுவு மசடனை
திருகு புலைகொலை கலிகள் சிதறிட அருள்தாராய்
குமர குரபர குமர குருபர
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர எனதாளங்
குரைசெய் முரசமொ டரிய விருதொலி
டமர டமடம டமட டமவென
குமுத திமிலைச லரிகி னரிமுத லிவைபாட
அமரர் முநிவரு மயனு மனைவரு
மதுகை மலர்கொடு தொழுது பதமுற
அசுரர் பரிகரி யிரத முடைபட விடும்வேலா
அகில புவனமொ டடைய வொளிபெற
அழகு சரண்மயில் புறம தருளியொ
ரருண கிரிகுற மகளை மருவிய பெருமாளே.