சரியான முறையே...
ஜனநாயக நாட்டில் எல்லா அமைப்புகளும் ஏதோ ஒரு சட்ட விதிகளுக்கு உள்பட்டவையாகத்தான் நமது அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை பொதுவெளியில் ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா போன்ற நாட்டில் அவர் வெளிப்படுத்தியது சரியான முறையே. ஏனெனில், இதை பொதுமக்களிடையே வெளிப்படுத்தாமல் நீதிமன்றம் செல்வது சரியாக இருக்காது. அதேபோல், ராகுல் காந்தி உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
ஆ.ஜூடு ஜெப்ரிராஜ், கோயம்புத்தூர்.
பெரிதாக்கப்பட்ட பிழை
நூறு கோடி அளவில் வாக்காளர்கள் கொண்ட இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் பெரு முயற்சியால் மட்டுமே துல்லியமான வாக்காளர் பட்டியல் தயார் செய்ய முடியாது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வம் வாக்காளர்களுக்கும் வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சிறு பிழையை ராகுல் காந்தி பெரிதாக்கிக் காட்டுகிறார். அன்று வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றச்சாட்டு; இன்று தேர்தல் ஆணையம் மீதே குற்றச்சாட்டு; நாளை வாக்காளர்கள் மீதும் குற்றஞ்சாட்டுவார். தேர்தல் ஆணையத்தின் பதில் மிகச் சரி.
எம்.ராஜம்மாள், சென்னை.
ஆதாரம் அவசியம்
கர்நாடக மாநிலம், மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சத்து இருநூற்று ஐம்பது வாக்காளர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக ஒரு குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்திருக்கிறார். அது உண்மையெனில், ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும். நிச்சயம் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பது அவசியம்.
டால்மியா சுவாமிநாதன், திருவானைக்காவல்.
அலட்சியப்படுத்த வேண்டாம்
தேர்தல் ஆணையம் தன் அமைப்புக்கு மிகுந்த அதிகாரம் கொண்டுள்ளது. அதன் பணிச் சுமையும் கடுமையானது. இருந்தாலும் மெத்தனப் போக்குடனோ, நடுநிலை தவறியோ செயல்பட நேர்ந்தால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். தேர்தல் ஆணையம் குறித்து எழுப்பட்ட புகார்களை, குறை
பாடுகளை, தவறுகளைக் கவனத்தில் கொண்டு தேவையான சீர்திருத்தம் செய்ய வேண்டும்; தக்க பரிகாரம் காண வேண்டும். மாறாக, புகார் தெரிவிப்போரை அலட்சியப்படுத்துவதாகவோ, அச்சுறுத்துவதாகவோ அதன் செயல்பாடுகள் இருந்துவிடக் கூடாது.
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.
ஜனநாயகத்துக்கு எதிரானது
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசுத் துறையின் மீது குற்றஞ்சாட்டுகிறார். சம்பந்தப்பட்ட துறை அதற்கான உரிய பதிலை அளிக்காமல் மிரட்டுவதும், திசைதிருப்புவதும் ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இந்திய தேர்தல் ஆணையம்தான் தனது குடிமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம்தான் தேசத்தின் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டைகளை வழங்குகிறது. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், வாக்காளர்களை நீக்கியது விதிகளுக்கு முரணானது.
சீனி.மணி, பூந்தோட்டம்.
சந்தேகம் எழுகிறது
போலி வாக்காளர்கள், முகவரி இல்லாத வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6-இன் தவறான பயன்பாடு, தேர்தல் முறைகேடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. அவற்றுக்கு தேர்தல் ஆணையம் முறையாக பதில் அளிக்காமல் இதுகுறித்து உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய ராகுலுக்கு அறிவுறுத்தியது நகைப்புக்குரிய செயலாகும். இந்திய தேர்தல் ஆணையம் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.
ரமீலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
சுதந்திரமாக இயங்கட்டும்
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் இருந்தால் ஜனநாயகத்துக்கு எச்சரிக்கை மணி; ஆதாரமின்றி இருந்தால், அது தேர்தல் முறையையே களங்கப்படுத்தும். உண்மை வெளிச்சம் காண, தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆனால், அதன் பதிலளிப்புத் தன்மை பலவீனமாக உள்ளது. ஒரு சுதந்திரமான அமைப்போ அல்லது நீதித் துறைக் குழுவோ தேர்தல் ஆணையத்தை விசாரிக்கும் அதிகாரம் பெற்றால், மேலும் நம்பகத்தன்மை ஏற்படும்.
சா.முகம்மது ஹுசைன், அறந்தாங்கி.
வெளிப்படைத்தன்மை வேண்டும்
தேர்தல் ஆணையம் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு தவிர அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு கேள்வி கேட்கும் உரிமை உண்டு; அதற்கு தகுந்த விளக்கமளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அன்று தேர்தல் ஆணையத்தின் தரத்தை டி.என்.சேஷன் உயர்த்தினார். ஆனால், இன்று தேர்தல் ஆணையம் வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாவது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல; தேசத்தின் ஜனநாயக அடையாளத்துக்கே சேதம்.
நா.குழந்தைவேலு, மதுரை.
நம்பிக்கை இழப்பு
வாக்குத் திருட்டு ராகுல் காந்தியால் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் பதில் மழுப்பலாகவும், தவறை ஒப்புக் கொள்ளாமல் சமாளிக்கும் உத்தி
யாகவே தெரிகிறது. தன்னாட்சி பெற்ற அமைப்பான தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படாமல் ஒரு கட்சி சார்பாக செயல்படுவது, ஜனநாயகத்தைக் குலைத்து கேள்விக்குறியாக்கும் செயல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தவறுகள் இருந்தால் அதைக் களைய முற்படாமல் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்தால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள்.
மு.நடராஜன், திருப்பூர்.
உள்ளொன்று புறமொன்று...
ஒரே வீட்டில் 80 பேர் வசிக்கின்றனர் என்பதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு தொகுதியில் மட்டுமே இப்படி லட்சக்கணக்கில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. நாட்டில் சில அமைப்புகள் உயிர்ப்புடனும் உண்மையாகவும் இருக்கின்றன என மக்கள் நம்புவதில் தேர்தல் ஆணையமும் அடக்கம். ஆனால், அண்மையில் வெட்டவெளிச்சமான வாக்குத் திருட்டு குறித்த செய்தி பதற வைக்கிறது. தேர்தல் ஆணையத்தின் பணி என்ன? யாருக்காக பணி செய்கிறார்கள்?. இது உண்மை எனில் மற்ற துறைகளும் இப்படித்தானா? உள்ளொன்று, புறமொன்றாக மக்களிடத்தில் சொல்லிக் கொள்வதும்தான் நடக்கிறதா?.
மு.கார்த்திக் தினேஷ், தென்காசி.
அரசியல் லாபத்துக்காகவே...
வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றதாகவும், அபத்தமானதாகவும் உள்ளன. ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதில் ஏதேனும் திருத்தங்கள், ஆட்சேபணைகள் இருந்தால் அதைத் தகுந்த விண்ணப்பங்கள் மூலம் சரி செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அரசமைப்பின் மூலம் அமைக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது குறை சொல்வது அரசியல் லாபத்துக்காகவே.
சி.இரத்தினசாமி, பொல்லிக்காளிபாளையம்.
மிரட்டக் கூடாது
முறையாக தேர்தல் நடைபெறவில்லை என்று தன்னிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், ஆதாரம் கிடைத்த பின்னரே தேர்தல் ஆணையம் மீது தான் குற்றஞ்சாட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார். இதற்கு விளக்கம் கூற முடியாத தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சித் தலைவரை மிரட்டுகிறது. பல இடங்களில் தேர்தலில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேர்தலே கள்ளத் தேர்தலாகிவிட்டதாக ஜனநாயகப் பற்றாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆ.லியோன், மறைமலைநகர்.
நாட்டு மக்களின் குரல்
வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில முறைகேடுகளின் அடிப்படையில் சொல்லியிருக்கிறார். இதை நாட்டு மக்கள் அனைவரின் குரலாகப் பார்க்க வேண்டும். முறைகேடுகள் குறித்து பதில் கூறவேண்டிய தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சித் தலைவரிடம் எழுத்துபூர்வமான உறுதிமொழியைக் கேட்பது ஆணையத்தின் நேர்மைக்கு இழுக்காக உள்ளது. குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து பார்ப்பதும், இனி இதுபோன்ற நிகழ்வுகள் வராமல் தடுப்பதும்தான் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்குச் சான்றாக அமையும்.
தணிகை மணியன், சென்னை.
தீர்வை நோக்கி...
வாக்குத் திருட்டு என ராகுல் காந்தியின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் பதிலும் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமான தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்பு. அதற்கான அதிகாரம் எந்த விதத்திலும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், திருத்தம் செய்தல் போன்றவை துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கும் வாக்காளர் பட்டியல் குறித்த செய்தி அனைவரையும் கவலை கொள்ளச் செய்கிறது. பொறுப்புள்ள தேர்தல் ஆணையம் இதற்கான தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும்.
மா.பழனி, கூத்தப்பாடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.