முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(04.04.1987)விகடன் ஆசிரியருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை - உரிமை மீறியதாக சபாநாயகர் தீர்ப்பை அடுத்து பேரவை முடிவு

அமைச்சர்களையும், சட்டப்பேரவை அங்கத்தினர்களையும் இழிவுபடுத்தி கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) வெளியிட்டதன் மூலம் சட்டப்பேரவையின் உரிமையை மீறியதாக பிரபல தமிழ் வார ஏடான ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்து, அவருக்கு மூன்று மாத காலம் கடுங்காவல் தண்டனை விதிப்பது என்று சனியன்று தமிழக சட்டப்பேரவை முடிவு செய்தது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

அமைச்சர்களையும், சட்டப்பேரவை அங்கத்தினர்களையும் இழிவுபடுத்தி கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) வெளியிட்டதன் மூலம் சட்டப்பேரவையின் உரிமையை மீறியதாக பிரபல தமிழ் வார ஏடான ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்து, அவருக்கு மூன்று மாத காலம் கடுங்காவல் தண்டனை விதிப்பது என்று சனியன்று தமிழக சட்டப்பேரவை முடிவு செய்தது.

இதற்கான தீர்மானம் ஒன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை சபை முன்னவரான நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் முன்மொழிந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, திராவிட முன்னேற்றக் கழகம், இடது, வலது கம்யூனிஸ்டு, லீக், ஜனதா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அங்கத்தினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே உரிமை மீறல் பிரச்னைக்காக பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்ற ஆண்டு வணிக ஒற்றுமை என்ற பத்திரிகையின் ஆசிரியர் பால்ராஜுக்கு உரிமை மிறல் குற்றத்துக்காக இரண்டு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

Advertisement

மார்ச் 29-ம் தேதியிட்டு வெளிவந்த ஆனந்த விகடன் வார ஏட்டில், முன் அட்டைப் படத்தில் பிரசுரித்திருந்த கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) காரணமாக எழுந்தது இந்த உரிமைப் பிரச்னை. இதன் தொடர்பாக ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியர் பாலசுப்பிரமணியத்துக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து சட்டசபை செயலாளர் மற்றும் ஆணையருக்கு ஆனந்த விகடன் ஆசிரியர் விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த விளக்கக் கடிதம் குறித்து சனிக்கிழமையன்று சட்டப் பேரவையில் சபாநாயகர் குறிப்பிட்டு, அப்பத்திரிகை ஆசிரியர் அவை உரிமை மீறல் குற்றத்தைச் செய்துள்ளார் என்று தீர்ப்பளித்தார்.

பின்னர் இது குறித்து ஒரு தீர்மானத்தை அவை முன்னவர் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் முன்மொழிந்தார். அதன்பிறகு ஏறத்தாழ 75 நிமிட நேரம் இதன் மீது பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பல நேரங்களில் குறுக்கீடுகள், கூச்சல், இரைச்சல், ஒரு பதட்ட நிலை ஆகியவை காணப்பட்டன.

பேரவையில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருந்து தெரிவித்தனர். ஆனந்த விகடன் ஆசிரியரின் விளக்கக் கடிதம் கிடைத்த பிறகு, பேரவையில் தெரிவிக்கப்பட்ட உணர்வுகளை உணர்ந்துகொண்டு விகடன் ஆசிரியர் மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கிறாரா? என்பதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று வேறு சில அங்கத்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில், சபாநாயகர் பி.எச்.பாண்டியன் குறுக்கிட்டு கருத்து தெரிவிக்கையில், இந்திய குற்றவியல் சட்டப்படி இரண்டாண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிப்பதற்கு வகை உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

அமைச்சர்களையும், பேரவை அங்கத்தினர்களையும் இழிவுபடுத்தும் நோக்கத்தோடு கேலிச் சித்திரம் வரைந்து வெளியிட்ட இந்தப் பத்திரிகையின் ஒரு விற்பனைத் தொகையை அபராதமாகவும் விதிக்கலாம் என்ற யோசனையையும் சபாநாயகர் பாண்டியன் தெரிவித்தார்.

***

ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம் சனிக்கிழமை மாலை 5.15 மணி அளவில் சென்னையை அடுத்த படப்பையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

உரிமை மீறல் குற்றத்துக்காக தமிழக சட்டப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

சென்னை மத்திய சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments