முகப்பு
திருச்சி

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!

ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் நாள்தோறும் 110 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:50 PM
கோப்புப் படம்
பகிர்:

- விஎன் ராகவன்

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மாநகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 110 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்குக் கொட்டப்பட்டு வந்த குப்பைகள் மக்கிய பிறகு உரமாக விற்பனை செய்யப்பட்டன.

இதை உள்ளூர் விவசாயிகள் வாங்கிச் சென்றதால், கிடங்கில் குப்பைகள் தேங்காமல் இருந்தன. இதன்மூலம், அப்போதைய நகராட்சி நிர்வாகத்துக்கும் வருவாய் கிடைத்தது.

Advertisement

ஆனால், இக்கிடங்குக்கு தெகிழிப் பொருள்கள், கணினி, மின்னணு கழிவுகள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், குப்பைகள் மக்குவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. விவசாயத்துக்குப் பயன்படாமல் போன இந்தக் குப்பைகளை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை.

இதனால், இக்கிடங்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக குப்பைகள் தேங்கி, மலைபோல குவிந்து கிடக்கின்றன. இக்கிடங்கில் கோடைக்காலத்தில் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் வரை அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுகிறது. அவற்றை முழுவதுமாக அணைப்பதற்குள் சில நாள்கள் கடந்து விடுகின்றன.

இதில் நெகிழிப் பொருள்களும் சேர்த்து எரிவதாய் ஏற்படும் சுற்றுக்சூழல் மாசு காரணமாக சுற்றியுள்ள செக்கடித் தெரு, ஜெபமாலைபுரம், உள்ளிட்ட ஏராளமான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதேபோல, மழைக்காலத்தில் கடும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

எனவே, இக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 2014-ஆம் ஆண்டு ரூ. 90 லட்சம் மதிப்பில் திடக்கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திட்டம் கைகொடுக்காததால் ரூ. 7.38 கோடி மதிப்பில் தலா 100 மீட்டர் நீள, அகலத்தில் 4.5 மீட்டர் ஆழத்துக்கு குழி தோண்டி குப்பைளைக் கொட்டி மூடுவது என 2016-ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், குழிதோண்டப்பட்டதே தவிர மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், அத்திட்டமும் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 14.9 கோடி செலவில் பயோ - மைனிங் என்கிற குப்பைகளைத் தரம் பிரித்து அப்புறப்படுத்தும் திட்டம் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படாததால், இப்பிரச்னை முடிவுக்கு வரவில்லை.

ஏமாற்றமே மிஞ்சியது:

இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகரில் 12 இடங்களில் நுண் உரமாக்கள் மையம் தொடங்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டம் 2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இதன் மூலம், குப்பைகளை ஒட்டு மொத்தமாக ஜெபமாலைபுரம் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுவதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் சேகரித்து, மையங்களில் தரம் பிரித்து உரமாக்கப் பட்டால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்திட்டமும் பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இதையடுத்து குப்பை கிடங்கை வேறொரு இடத்துக்கு மாற்ற 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என கடந்த ஆண்டு மாமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதுவும் நடை முறைக்கு வராததால், மாநகர மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஒவ்வொரு தேர்தலிலும் குப்பைக் கிடங்குக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிக்கின்றன.

ஆனால், இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படாததால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இதற்கு இந்த முறையாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments