முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(08.04.1991)இ.காங்கிரஸில் இருந்து நேர்மையான அரசியல்வாதிகள் விலக வேண்டும் - பிரதமர் சந்திரசேகர் வேண்டுகோள்

இ.காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நற்சிந்தனை உள்ள, நேர்மையான அரசியல்வாதிகள் அனைவரும் அக்கட்சியை விட்டு விலகிவிட வேண்டும் என்று ஜனதா தளம் (சோ) கட்சித் தலைவரும், பிரதமருமான சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

இ.காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நற்சிந்தனை உள்ள, நேர்மையான அரசியல்வாதிகள் அனைவரும் அக்கட்சியை விட்டு விலகிவிட வேண்டும் என்று ஜனதா தளம் (சோ) கட்சித் தலைவரும், பிரதமருமான சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பம்பாய் சிவாஜி பார்க்கில், அக்கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் சந்திரசேகர் பேசினார். இ.காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாகத் தாக்கினார்.

இ.காங்கிரஸ் கட்சி தனது மோசமான நடவடிக்கைகள் மூலம் நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லக்கூடும். எனவே, இ.காங்கிரஸில் உள்ள தேசீய அரசியல்வாதிகள், நேர்மையானவர்கள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அக்கட்சியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement

இ.காங்கிரஸ் கட்சி தமது அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளாதபோதும் தானும், தமது அமைச்சரவையும் ராஜிநாமா செய்ய முடிவு செய்ததை நியாயப்படுத்தி சந்திரசேகர் பேசினார்.

ஆதரவு தருவதாகக் கூறி பின்னால் இருந்து அடக்கியாள முயன்ற இ.காங்கிரஸின் போக்கைத் தம்மால் சகித்துக்கொள்ள முடியாததாலேயே தமது அமைச்சரை ராஜிநாமா செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஜனதா தள (சோ) அரசுக்கு எதிராக இ.காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர். வி.என்.காட்கில் ஊழல் புகார்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது பற்றி அவர் குறிப்பிட்டார். வரம்பு மீறிப் பேச வேண்டாம் என்று காட்கிலை அவர் எச்சரித்தார்.

மக்களை இரட்சிப்பவராக பகவான் ஸ்ரீராமன் கருதப்படுகிறார். ஆனால், ஒரு சில அமைப்புகள் ஏதோ தாங்கள் ஸ்ரீராமனை ரட்சிக்கப்போவதாக கூறிக்கொண்டு வருகின்றன என்று சந்திரசேகர் குறிப்பிட்டார்.

வகுப்புப் பிரிவினை என்ற அச்சுறுத்தல் மூலம் நமது நாடு தனித்தன்மையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

நமது அண்டை நாடுகளான நேபாளம், பூடான் போன்றவை ஜனநாயகப் பாதையில் திரும்பியுள்ளதுடன் அனைத்துத் துறையிலும் இந்தியாவின் யோசனையையும் ஒத்துழைப்பையும் நாடியுள்ளன. நாம் அவற்றுக்கு வழிகாட்டக் கடமைப்பட்டுள்ளோம். நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் இது சாத்தியமாகும். நாம் ஒற்றுமையுடன் இருந்தால் எந்த அந்நிய சக்திகளுக்கும் அடிபணிய வேண்டியதில்லை என்றும் சந்திரசேகர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments