இந்த நாளில் அன்று(23.04.1947)சுதேசிக் கல்வி முறையான புதுக் கல்வியைப் பயிலுங்கள் - அந்நியக் கல்வி முறையை விடாவிட்டால், உங்கள் துன்பங்களுக்கு முடிவு கிடையாது - மகாத்மா காந்தி
இந்தியர்கள் சுதந்தர மக்களாயும், உண்மையான மனிதர்களாயும் வாழ வேண்டுமானால் ஒரு தேசியக் கல்வி முறையைப் பின்பற்ற வேண்டும் என மகாத்மா காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
இந்தியர்கள் சுதந்தர மக்களாயும், உண்மையான மனிதர்களாயும் வாழ வேண்டுமானால் ஒரு தேசியக் கல்வி முறையைப் பின்பற்ற வேண்டும் என மகாத்மா காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
காந்திஜி கூறியதாவது:
இப்போதுள்ள கல்வி முறை ஜனங்களை அநேகமாக ஜீவன் அற்றவர்களாகச் செய்துவிட்டது. அரண்மனை போன்ற பிரம்மாண்டமான சர்வகலாசாலை கல்லூரி கட்டடங்கள், வெறும் அடிமைகளையும், குமாஸ்தாக்களையும், ஒரு சில டாக்டர்கள், பாரிஸ்டர்களையுமே சிருஷ்டி செய்திருக்கின்றன. இப்போது என் தேச மக்கள் இருக்கும் துன்பம் நிறைந்த நிலைமை கண்டு நான் பரிதாபப்படுகிறேன். அவர்களுக்கு போஷாக்கு இல்லை. உண்ண உணவோ, உடுக்க உடையோ இல்லை.
Advertisement
நீங்கள் அந்நியக் கல்வி முறையைப் பின்பற்றுவதை நிறுத்தி சுதேசிக் கல்வி முறையான புதுக் கல்வி (நயிதலீம்) முறையை பின்பற்ற வேண்டும். அது உங்களுக்கு புத்துயிரையும் ஊக்கத்தையும் அளிக்கும். அது இந்தியாவில் உள்ள ஆண் பெண் ஒவ்வொருவரையும் சுயதேவையை பூர்த்தி செய்துகொண்டவர்களாகவும், எங்கள் வேலைகளைச் செய்வதற்கு சுதந்தரம் உடையவர்களாயும் இருப்பார்கள்.
ஒரு தேசியக் கல்வி பயிலுவதால் நீங்கள் உங்கள் சொந்த ஆடையையும் உணவையும் உற்பத்தி செய்துகொள்ள முடியும். பின்னர் நீங்கள் உலகில் சுதந்தர மக்களாக பெருமிதத்துடன் வாழ முடியும்.
நயிதலீம் என்ற கருத்தே உங்களுக்கு சொப்பனம் போலத் தோன்றலாம். ஆனால், உங்கள் மனம் இளகினாலொழிய குழந்தைகளுக்கு ஆங்கில கல்வி முறையை போதிப்பதைக் கைவிட்டாலொழிய உங்கள் துன்பங்களுக்கு முடிவு கிடையாது.