முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(25.03.1977)லோக சபை நிறைவேற்றும் மசோதாவை ராஜ்ய சபை நிராகரித்தால் என்ன ஆகும்?

லோக சபை நிறைவேற்றி அனுப்பும் ஒரு மசோதாவை ராஜ்ய சபை நிராகரித்துவிட்டால் என்ன நடக்கும்?

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

லோக சபை நிறைவேற்றி அனுப்பும் ஒரு மசோதாவை ராஜ்ய சபை நிராகரித்துவிட்டால் என்ன நடக்கும்?

லோக சபையில் இப்போது ஜனதா கட்சி பெரும்பான்மையாகவும், ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாகவும் உள்ளதால், இந்த சிக்கலான பிரச்னை எழுந்துள்ளது.

வழக்கமாக, லோக சபையிலிருந்து ராஜ்ய சபைக்கு வரும் மசோதாக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

Advertisement

1. பணம் சம்பந்தப்பட்ட மசோதாக்கள்

2. அரசியல் சாசனம் தொடர்பான மசோதாக்கள்

3. இதர மசோதாக்கள்

இவற்றில் பணம் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் விஷயத்தில் பிரச்னை ஏதும் கிடையாது. ஏனெனில் பணம மசோதாவை நிறைவேற்றுவதற்கு லோக சபைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ராஜ்ய சபைக்கு இந்த மசோதாவை நிறைவேற்றும் அதிகாரம் ஏதும் கிடையாது.

லோக சபை நிறைவேற்றி அனுப்பும் பண மசோதாவை ராஜ்ய சபை பரிசீலனை செய்துவிட்டு 14 நாட்களுக்குள் லோக சபைக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்பதே விதிமுறையாகும். அப்படி 14 நாட்களுக்குள் திருப்பி அனுப்பாமல் போனாலும் அந்த மசோமா நிறைவேறியதாகவே கருதப்படும்.

ஆனால், அரசியல் சாசனம் தொடர்பான மசோதாக்களின் விஷயமே வேறு. அரசியல் சாசனம் தொடர்பான மசோதாவை, ராஜ்ய சபையும் நிறைவேற்றியாக வேண்டும். இல்லையெனில் மொத்தத்தில் அந்த மசோதா நிறைவேறியதாகக் கருதப்படாது.

மன்னர் மானிய ஒழிப்பு மசோதா விஷயத்தில் இப்படித்தான் நடந்தது. அது 1971 தேர்தலுக்கு முன் நடந்த சம்பவமாகும். அப்போது ராஜ் சபையில் காங்கிரஸுக்கு மெஜாரிட்டி இல்லை. எனவே லோக சபையில் நிறைவேறிய மன்னர் மானிய ஒழிப்பு மசோதா ராஜ்ய சபையில் தோல்வியுற்றது.

பண மசோதா, அரசியல் சட்டம் தொடர்பான மசோதா ஆகியவற்றைத் தவிர, இதர வகையான மசோதாக்கள் தொடர்பாக வேறுவித நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, இந்த இதர வகை மசோதாக்களை லோக சபை நிறைவேற்றி அவற்றை ராஜ்ய சபை நிறைவேற்ற மறுத்தால், இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.

இதுபோல ஒரு மசோதாவை நிறைவேற்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்ட சம்பவம், இந்திய பார்லிமெண்ட் வரலாற்றிலேயே ஒரே ஒருமுறைதான் நடந்துள்ளது. 1961-ல், வரதட்சிணை ஒழிப்பு மசோதா கொண்டுவரப்பட்டபோது, இப்படி நடந்தது.

இந்த மசோதாவுக்கு ராஜ்ய சபை ஒரு திருத்தம் கொண்டு வந்தது. இதனை லோக சபை ஏற்கவில்லை. எனவே, இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் கூட்டப்பட்டது. இவ்வாறு கூட்டுவதற்கு அரசியல் சாசனத்தின் 108-வது ஷரத்து வகையளிக்கிறது.

ராஜ்ய சபையில் மொத்தம் 224 ஸ்தானங்கள் உள்ளன. கட்சிவாரியாக இப்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கை விவரம் வருமாறு: காங்கிரஸ் 162, வலது கம்யூனிஸ்டு 11, பாரதீய லோகதளம் 6, ஜனசங்கம் 5, ஸ்தாபன காங்கிரஸ் 5, அஇஅதிமுக 4, திமுக 2, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி 1, முஸ்லிம் லீக் 3, கேரள முஸ்லிம் லீக் - 1, இடது கம்யூ. 1, பாரதீய கிராந்தி தளம் 1, குடியரசுக் கட்சி 1, சுயேட்சை 12, நியமன மெம்பர்கள் 8, காலி ஸ்தாபனங்கள் 19.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments