முகப்பு
கல்வி மணி

முதல்வர்கள் இல்லாத அரசு கலைக் கல்லூரிகள்

தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான அரசுக் கலைக்  கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கல்லூரிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்ற முடியாத அவல நிலை  உள்ளது.  தமிழகத்தில் 6

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:31 PM
பகிர்:

தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான அரசுக் கலைக்  கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கல்லூரிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்ற முடியாத அவல நிலை  உள்ளது.

 தமிழகத்தில் 62 அரசு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் இரண்டு லட்சம் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். நடப்புக் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர், முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது.

 பெரும்பாலான கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையால் கெüரவ விரிவுரையாளர்கள் மீண்டும் தாற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு பணியாற்றி

Advertisement

வருகின்றனர். இந்த நிலையில் மொத்தமுள்ள 62 கல்லூரிகளில் 48 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் கடந்த பல மாதங்களாக காலியாகவே உள்ளது. நடப்பு கல்வியாண்டிலும் முதல்வர்களை நியமிப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.

 புதிய முதல்வரை நியமிப்பதில் ஏற்படும் கால தாமதத்துக்கு பேராசிரியர்களிடையே நிலவும் மும்முனைப் போட்டிதான் காரணமாக உள்ளது. கடந்த 1975-களில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஆய்வகங்களை மட்டும் கண்காணிக்கும் டெமான்ஸ்ரேட்டர், வகுப்பு மட்டும் நடத்தும் டியூட்டர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டன. அதே சமயம் இந்த இரண்டு பணிகளையும் மேற்கொள்ளும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன.

 சில ஆண்டுகளிலேயே டெமான்ஸ்ரேட்டர், டியூட்டர் பணியிடங்கள் உதவிப்  பேராசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டன. இப்போது முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இவர்கள், தாங்கள் ஏற்கெனவே டெமான்ஸ்ரேட்டர், டியூட்டர்களாக பணியாற்றிய பணிக் காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

கடந்த 1979-ல் அரசுக் கல்லூரிகளுக்கு தாற்காலிகமாக பணி அமர்த்தப்பட்ட 620 உதவிப் பேராசிரியர்கள் 1988-ல் பணி நிரந்தரம் பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 400 பேர் இப்போது பணியில் உள்ளனர். இவர்களும் தாங்கள் தாற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்து முதல்வர் பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர்.

 இவர்கள் தவிர முறையான பணி மூப்பு அடிப்படையில் சீனியர்களாக இருப்பவர்களும் முதல்வர் பதவிக்கான மும்முனைப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த மும்முனைப் போட்டியில் சிக்கித் தவிக்கும் முதல்வர் காலிப் பணியிடங்கள் இப்போதைக்கு நிரப்பப்பட வாய்ப்பு இல்லை என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கல்லூரிகளில் தாற்காலிக முதல்வர்களே பணியாற்றுவதால் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவதில்லை. இதனால் கல்லூரிகளுக்குத் தேவையான கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை செய்வதற்கு கூட இயலாத நிலை உள்ளதாக கல்லூரி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தாற்காலிக முதல்வரே அதிகாரத்தில் இருப்பதால் கல்லூரி செயல்பாடுகள், கற்றல் நிகழ்வுகள் யாவும் ஏனோதானோ என்றுதான் நடைபெறுகின்றன. இதனால் கல்வித் தரம் பாதிக்கப்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.