முகப்பு
கல்வி மணி

திறந்த நிலைப் பட்டம்: அரசு துறைகளுக்குள் முரண்பாடு

அரசுத் துறைகளில் திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களை ஏற்பதில் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இதனால், அதில் படிக்கும் மாணவர்களும், அரசுத் துறைகளில் பணியாற்றுவோரும் பெரும் குழப்பத்தில் சிக்க

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:18 PM
பகிர்:

அரசுத் துறைகளில் திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களை ஏற்பதில் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இதனால், அதில் படிக்கும் மாணவர்களும், அரசுத் துறைகளில் பணியாற்றுவோரும் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளனர்.

பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ இவற்றைப் படிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பெறப்படும் நேரடி பட்டங்கள் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அரசின் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாகப் பின்பற்றப்படுகிறது.

தமிழக அரசின் முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்கும் சட்டப் பேரவைச் செயலகத்தில் இந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதனால், செயலகத்தில் பணியாற்றிய 4 பேருக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர்கள் பழைய பணி நிலையிலேயே தொடர்கின்றனர்.

அரசுத் துறைகளில்:  சட்டப் பேரவைச் செயலகத்தில் இப்படி என்றால், அரசுத் துறைகளுக்கு பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியாளர் தேர்வாணையத்தில் வேறு மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அங்கு, திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, சார்புச் செயலாளர்களாக இருக்கும் இருவருக்கு துணைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு சில நிபந்தனைகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்படி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் நடைபெற்ற போலீஸ் தேர்வில் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ஒரு துறையில் அனுமதியும், மற்றொரு துறையில் மறுப்பும் என அரசின் நிலைப்பாடு முரண்பாடாக உள்ளது.

அரசின் முடிவு என்ன? பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ முடித்து விட்டு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த உத்தரவு அனைத்து நிலைகளிலும் தீவிரமாக அமலாக்கப்படவில்லை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட பிரச்னைகள் வரும் போது மட்டுமே அரசு அதன் மீது முடிவெடுக்கிறது. திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டம் செல்லுமா? செல்லாதா? என்பதை அரசின் உத்தரவு மூலம் தெரிவிக்க வேண்டும். ஆனால், இப்போது உயர் பதவியில் இருக்கும் பலரும் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் தான். இந்தப் பிரச்னையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திறந்த நிலைப் பல்கலைக்கழக பட்டங்களை நம்பும் இளைஞர்கள் ஏமாற்றப்படுவர்'' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →