சுகானுபவம் தந்த சுவானுபவா!
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் நடந்து கொண்டிருக்கும் "சுவானுபவா' எனும் இசைக் கொண்டாட்டம், முன்னணி இசைக் கலைஞர்களான டி.எம். கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ ஆகிய இருவரின் பொறுப்பில், "மாத்
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் நடந்து கொண்டிருக்கும் "சுவானுபவா' எனும் இசைக் கொண்டாட்டம், முன்னணி இசைக் கலைஞர்களான டி.எம். கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ ஆகிய இருவரின் பொறுப்பில், "மாத்ருகா' எனும் அமைப்பின் மூலம் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
இசையரங்குகளில் இசைக் கச்சேரிகள் மட்டும் என்றில்லாமல், கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள ஆசிரியர்கள், மாணவ மாணவியர்களுக்கு ஒரு சுகானுபவத்தைத் தருகிறது. அவர்களையும் இதில் பங்கேற்க வைக்கிறது. இந்த வருடம் கலாúக்ஷத்ரா, செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயம், பி.எஸ்.பி.பி. (கேகே நகர்), மியூசிக் அகாடமி மற்றும் வித்யா மந்திர் ஆகிய இடங்களில் இவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
இந்தக் கொண்டாட்டத்தில் மற்றொரு வித்தியாசமும் உண்டு. ஒய்.ஜி.மகேந்திரனும், ஏ.ஆர். சீனிவாசனும் கிரேசி மோகனும் சினிமாவில் நகைச்சுவை பற்றிப் பேசினார்கள். பாடகர் எஸ். பி.பி.யும் ராஜீவ் மேனனும் சினிமாவில் இசை பற்றிக் கலந்துரையாடினார்கள். சங்கீத கலாநிதி வித்வான் டி.கே.மூர்த்தி தனித் தாள வாத்தியக் கச்சேரி செய்தார். நவீன நாடகக் குழு கூத்துப்பட்டறை தனது நாடகத்தை நிகழ்த்திக் காட்டியது. வர்க்கரி சம்பிரதாய பஜனைகளை துக்காராம் கணபதி மஹராஜ் பாடியது ஒருவகை, நடனத்துக்கு அலர்மேல்வள்ளியும் மாளவிகா சருக்கையும்.
ஒரு குறிப்பிட்ட நாளில் மியூசிக் அகாடமியில் மத்தியான நிகழ்ச்சி நிரலில் முதலில் வந்தது, ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளிச் (இந்திரா நகர்) சிறார்கள் அளித்த சேர்ந்திசை. மியூசிக் அகாடமியில் பாடும் வாய்ப்பைப் பெற்றதினால் குழந்தைகளுக்கும் அவர்களுக்கு அதிக கவனம் செலுத்தி சிறப்பாகப் பயிற்சியளித்த ஆசிரியை உமாவுக்கும் பாராட்டு அளிக்கலாம்.
கிடைத்த சிறிது நேரத்தில் ஆலாபனையிலும் பாட்டிலும் திறனை வெளிக் கொணர்ந்தனர். இதற்கடுத்த நாளில் 96 சிறுவர் சிறுமியர் மிக நேர்த்தியாக நவராத்திரி கொலுப் படிகளில் பொம்மைகள் வீற்றிருப்பதைப் போல அமர்ந்து, வித்யா மந்திர் பள்ளியில் காலை வேளையில் ஆரம்ப நிகழ்ச்சியாகப் பாடியது மனதில் நின்றது. குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலமே கலையுணர்வுகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்படும் என்பதை இந்த இரு நிகழ்வுகள் நிதர்சனப்படுத்தின.
அடுத்து சஷாங்கின் புல்லாங்குழலைக் கேட்க நேர்ந்தது. பல குழல்களை உபயோகித்து வாகதீஸ்வரி, ஹம்ஸநாதம் போன்ற இராகங்களில் தன் தனித்திறமையை வெளிப்படுத்தினார். சாகசங்களை அனாயாசமாகச் செய்வது இவருக்குக் கைவந்த கலை. கச்சேரிக்குப் பிறகு நடந்த கேள்வி-பதில் மிக சுவாரஸ்யமாக அமைந்தது. குழலில் ஒரே சமயத்தில், கீழ் ஸ்தாயியையும் மேல் ஸ்தாயியையும் ஒலிக்கும் விதத்தைப் பற்றிய கேள்வி எழுந்தது. சஷாங்க் சீராக இரண்டு வகைகளையும் காற்று வெளிக் கொணரும் மாறுபாடுகளினால் எவ்வாறு இது ஒரு இன்ப ஒலியாக ஒலிக்கிறது என்பதை வாசித்துக் காண்பித்தார். இந்த வித்தையின் முன்னோடி, வித்வான் டி.ஆர். மகாலிங்கத்தை நம் மனக் கண்முன் கொண்டு நிறுத்தினார். இது போலவே கால நிர்ணயங்கள் குறித்த வினாவிற்கும் ஒரு சிறந்த உதாரணத்துடன் அவர் பதிலளித்தார்.
பக்கவாத்தியங்களுக்காக ஒரு தனிப் பகுதி இடம் பெற்றிருந்ததால் வளரும் கஞ்சிரா கலைஞர் அனிருத் ஆத்ரேயாவிடம் ஸ்வானுபவா பற்றிக் கேட்டோம். உற்சாகத்துடன் பதிலளித்த அவர் ""இது இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வருடம் 35 நாடுகளில் ஆயிரக்கணக்கில் இண்டர்நெட் மூலம் இது உலகம் முழுவதிலும் அனுபவிக்கப்பட்டது. இங்கு வரும் இளைஞர்கள் எல்லோருமே கச்சேரிகளுக்கு ஆஜராகாமல் போனாலும், பெரிதளவிற்கு இந்த வருடம் வந்தவர்கள் கச்சேரிகளுக்கு ஈர்க்கப்படுவார்கள் என்று என் மனம் நம்புகிறது.
இது போலவே மாளவிகா ஒரு இளம் வாய்ப்பாட்டுக் கலைஞர். அவர் இந்த முறை வாலண்டியர் என்ற ஸ்தானத்தில் இதில் பங்கு பெற்றது எனக்குப் பெரு மகிழ்ச்சி. திருச்சி, மதுரை இன்னும் தமிழ்நாட்டில் உள்ள பலவிடங்களிலும் இது பிரகாசிக்க வேண்டும் என்பது என் அவா. என்னைப் பொறுத்தவரையில் எட்டவொண்ணா மகாமேதைகளிடத்தில் நாம் கலை பற்றிக் கேட்டுத் தெரிந்து தெளிவு பெற இது ஒரு அரிய வாய்ப்பு. அவரவர்கள் நிலையிலிருந்து எழும் கேள்விகளுக்கும் இங்கு பதில் உண்டு என்பது ஒரு முக்கிய நிகழ்வாக எனக்குத் தோன்றுகிறது'' என்றார்.
ஒரு நூறு வருடகாலமாக வயலின் பாரம்பரியத்தில் மூழ்கி இருக்கும் பரூர்-பாணியிலிருந்து வருபவர் வயலின் கலைஞர் அனந்தகிருஷ்ணன். அவர் நிகழ்ச்சி குறித்து, ""நான் ஜூனியர் தரப்பில் ஒரு பக்க வாத்தியக் கலைஞன். இந்த நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்வதின் மூலமாக விளைந்த அனுபவத்தால், பல பாடங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு புதிய சங்கதியைக் கேட்டவுடன் இதைப் பரூர் பாணியில், அதற்கு உகந்த வகையில் எப்படி அமைப்பது என்று என்னை எண்ண வைக்கிறது. சற்றுப் புதிதாக இந்த இசையில் உள்ள சிலருக்குப் புதிய சங்கதிகள் அவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்து விடுகிறது. இளைஞர்கள் பலரை மேடைக்கு அழைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதன் வழியாக நமது பழைய இசை வல்லுனர்களைப் பற்றி இன்றுள்ளவர்களை அறியவைக்கும் நிகழ்ச்சிகளை நான் வரவேற்கிறேன்'' என்றார்.
தொலைக்காட்சி அர்த்தமற்றதைக் காட்டி இளைஞர்களை திசைமாறி இட்டுச் செல்லும் நேரத்தில், குழந்தைகளுக்கும் வளரும் ரசிகர்களுக்கும் ஸ்வானுபவா ஒரு யதார்த்த கலைப் புத்தகம். புரட்டினால் ஞானம் பெற வைக்கும். வந்திருக்கும் ஆர்வலர்களும் கலைப் பயன் பெற்றார்கள் என்பது உறுதி. இவர்களின் பணி வளர வாழ்த்துக்கள்
இதே தருணத்தில் இந்த அமைப்பு, அடுத்த கட்டமாக சென்னையில் மற்ற பல பகுதிகளிலும் - புரசைவாக்கத்திலும், அம்பத்தூரிலும், நங்கநல்லூரிலும், வண்ணாரப்பேட்டையிலும் தனது இனிய கலைப்பணிகளைப் பரப்புதல் அவசியம். அங்குள்ளவர்களின் கலையுணர்வும் உயரும் - இதையும் சாத்தியமாக்குங்கள்.