பிடித்த ஓவியர்னா....... ராஜா ரவி வர்மா தான்!
மனீஷ்- தனது ஓவியங்களினால் உயர்ந்து நிற்கும் சிறுவன். படிப்பு சென்னை ஜவாஹர் வித்யாலயா பள்ளியில். 2005}இல் தான் அவர் இந்த ஓவிய முயற்சியில் முன்னடி எடுத்து வைத்தார். அவருக்கு ஓவியப் பயிற்சியளித்தவர்களில்
மனீஷ்- தனது ஓவியங்களினால் உயர்ந்து நிற்கும் சிறுவன்.
படிப்பு சென்னை ஜவாஹர் வித்யாலயா பள்ளியில். 2005}இல் தான் அவர் இந்த ஓவிய முயற்சியில் முன்னடி எடுத்து வைத்தார். அவருக்கு ஓவியப் பயிற்சியளித்தவர்களில் முக்கியமானவர் அன்னை காமாட்சி கலைக் கூடத்தின் இயக்குநரான வெங்கடாசலபதி.
சித்ரமேளா கண்காட்சியில் இந்த வருடம் பரிசு பெற்ற இந்த இளம் ஓவியக் கலைஞரின் படைப்புகள் 2006 முதலே லலித் கலா அகாடமி கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் (25 ஜூன் முதல் 27
ஜூன் வரையில்) இவரது ஓவியங்கள் சென்னை மயிலாப்பூர் எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீ பார்வதி ஆர்ட் காலரியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எல்லா ஓவியங்களுமே பிரமிப்பூட்டும் விதமாக இருந்தன. பூக்கள், காட்டு வழிப்பாதை இயற்கையின் மகத்துவம் அதிகம் தெரிந்தது. தவிர கறுப்பு வெள்ளையின் மகத்துவத்தை தன் கைவண்ணத்தால் சிறக்கச் செய்தல், கரித்துண்டுகளால், வெறும் பேனாவால் விசித்திரமான தனது ஓவியத் திறனை வெளிக் கொணர்தல் போன்ற பல வகையான ஓவியங்கள் காணப் பெற்றன.
சுவரின் ஓரத்தில் தனது முதுகை உரசிக் கொண்டு நம்மை உற்று நோக்கும் பூனை நம் மனதை உரசிச் சென்றது. வயது முதிர்ந்த ஓவியக் கலைஞர் ஒருவர் சாதாரணச் செருப்பணிந்து பைஜாமா ஜிப்பாவுடனும் கையில் அவரது ஆயுதங்களான பல தூரிகைகளுடன் நடந்து செல்லும் காட்சியும் மனதில் அழுத்தமாகப் பதிந்தது.
ஒரு காளை மாடும் ஒரு யானையும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் காட்சியை வரையும்போது யானையின் துதிக்கையையும் மாட்டின் கொம்பையும் மட்டுமே வரைந்து நம்மை நெகிழச் செய்துவிட்டார்.
எப்படி ஓவியத்தில் ஆர்வம் வந்தது அவருக்கு என்று கேட்டோம். எப்போதும் டி வி பார்த்துக் கொண்டிருந்த அவரைத் திசை திருப்ப ஓவியம் வரையச் சொன்னாராம் அவர் தந்தை ரமேஷ்.
""மனீஷுக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகரித்தது. இடைவிடாத பயிற்சி. நன்றாக வழிநடத்திச் சென்று ஊக்குவித்த பயிற்சியாளர்கள். க்ரூப் ப்ளாஸம்ஸ் என்ற ஒரு கண்காட்சியை சோழாஷெரட்டனில் 2008ஆம் ஆண்டு நடத்தும் அளவிற்கு மனீஷ் வளர்ந்து விட்டது, எங்களுக்கும் அவனுக்கும் பெருமை சேர்த்தது.
அங்கு வந்திருந்த மாபெரும் ஓவியர் மணியம்செல்வன் இவரது வரைகோடுகள் நேர்த்தியானதாக உள்ளன என்று பாராட்டினார். தற்பொழுது இங்கு நடத்தப் பெற்ற இந்தக் கண்காட்சியும், இதற்குக் கிடைத்த வரவேற்பும், 2 வருடங்களுக்கு ஒரு முறையேனும் இவ்வாறு நடத்தலாம் என்ற எண்ணத்தை தோன்றச் செய்துள்ளது.
இது அவனது வளர்ச்சியைப் பார்வையாளர்கள் இனம் கண்டு கொள்ள உதவியாக இருக்கும்'' என்கிறார் ரமேஷ் பெருமையாக.
மனீஷிடம் பேசினோம்.
""எனக்கு மிகவும் பிடித்தது நான் வரைந்துள்ள அந்தக் கலர் பென்சில் ஓவியங்கள் தான். அந்தக் கோழி உள்ள படம். மூடு இருந்தால் ஒரேயடியா 3 அல்லது ஐந்து மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வரைந்து முடித்து விடுவேன்.
ஆனா சில சமயம் அதுவே நீண்டு இரண்டு நாள் கூட ஆகும். நான் கத்துக்க இன்னும் நிறைய இருக்கு. பிடித்த ஓவியர்னா...ராஜா ரவிவர்மா தான். மணியம் செல்வன் சாரும் எனக்கு நிரம்பப் பிடிக்கும். பிக்காúஸாவா.....ஓ அவரைப் பிடிக்காமல் இருக்குமா?'' கண்களில் மகிழ்ச்சி மின்ன அவர் பேசுவதைக் கேட்டபோது ஓர் ஓவியம் பேசுவதைப் போல இருந்தது.
வெறும் அழகிய காட்சிகளாக உள்ள இந்த இளம் ஓவியரின் ஓவியங்கள், இவர் வளர்ந்து வரும் போது சமூக அக்கறையுடன் பரிணமிக்கும் என்ற நம்பிக்கை தோன்றியது.