ராமாவதாரத்தில் இலங்கைக்குத் தூதுவனாகச் சென்ற அனுமனுக்குக் கிடைத்த சிறப்பினை உணர்ந்து, "எம்பெருமான், கிருஷ்ணாவதாரத்தில் தானே தூது சென்று, அந்த அனுபவத்தைப் பெற்றார்' எனத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்.
மகாபாரத காவியம், ஒரு குலத்தில் பிறந்தோர் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நீதியை முதன்மையாகப் போதிக்கிறது.
பஞ்ச பாண்டவரில் மூத்தவரான கர்ணனுக்கு முடிசூட்ட வேண்டுமென முதலில் சொல்லியவர் சகாதேவன். தானே முடிசூடாமலிருந்தபோதிலும், கர்ணனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தவன் துரியோதனன்.
யானைக்குத் தன் பலம் தெரியாது என்ற உண்மை, ஒரு சிறிய குச்சியை வைத்துள்ள பாகனுக்கு யானை அடங்குவதிலிருந்து புரிந்து விடுகிறது.
விறகைக் கடைந்தால் தீ, பாலைக் கடைந்தால் வெண்ணெய், நம் மனதைக் கடைந்தால் தெய்வம்.
திரெüபதியின் மானத்தைக் காத்த கண்ணனின் கருணையை நினைவுகூறும் அழகான நாட்டுப்பாடல்,"அத்துவானத்துக்கும், ஓட்டகைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடந்தது சேலை வியாபாரம்'. அத்துவானம்-அஸ்தினாபுரம், ஓட்டகை-துவாரகை.
"தொட்டுத் தாலி கட்டுவது' என்று நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு, முகூர்த்தத்துக்கு தாலியைத் தட்டில் வைத்து, பெரியவர்களால் தொடப்பட்டு அவர்கள் ஆசியோடு கட்டப்படும் தாலி எனப் பொருள் கொள்ள வேண்டும்.
பெரியவர்களின் கனிவான பார்வையின் மூலமும், அவர்களின் ஸ்பரிசம் படுவதாலும், அவர்கள் காலில் விழுந்து வணங்குவதாலும், அவர்கள் மனதில் நல்ல இடம் பிடிப்பதாலும் நாம் நல்ல அறிவைப் பெற முடியும்.
புறாக்கள் அதிசய குணம் கொண்டவை. ஆண் புறாவும் பெண் புறாவும் எப்போதும் பிரியாமல் ஜோடியாகவேத் திரியும். பெண்புறா இறந்தால், ஆண் புறா வேறு துணை தேடாது. அதே மாதிரி, ஆண் புறா இறந்தால் பெண் புறாவும் வேறு ஆணை நாடாது. பெண் புறாக்கள் முட்டையிடும்போது ஒரே சமயத்தில் பெண் புறா, ஆண் புறாவென இரு முட்டையிடும்.
மகாபாரதத்தில், விதுரரைப்பற்றி நிலவி வரும் கருத்து, அவர் குடிசையில் வாழ்ந்தார்; கண்ணனைக் குடிலுக்கு அழைத்துத் தரையில் உட்கார வைத்து கனிகளைத் தந்தார் என்பதே. ஆனால் வில்லிப்புத்தூரார் தன் பாடல்களில், அமைச்சராக இருந்த விதுரன், தான் வாழ்ந்த மாளிகைக்குக் கண்ணனை அழைத்து, நவரத்தின சிம்மாசனத்தில் அமரச் செய்து, அறுசுவை உணவு சமைத்து உண்ணச் செய்தார் என்றே குறிப்பிட்டுள்ளார்.
தன்னைச் சரணாகதி அடைந்தோரைக் காக்கவே, கண்ணன் தனக்கு அவப்பெயர் வந்தபோதும் தூது சென்று, போரில் பாண்டவர்களுக்கு வெற்றி பெற உதவினான்.
(தியாகராயநகர் வாணி மஹால் ஓபுல்ரெட்டி அரங்கில் நடைபெற்ற சி.வி.சேஷாத்ரியின் "கண்ணன் தூது' ஆன்மிகச் சொற்பொழிவிலிருந்து...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.