கடின உழைப்பு, நேர்மை, விடா முயற்சி!
ஒருவர் ஒரு தொழிலைச் செய்தால் அவருக்குப் பணம் கிடைக்கலாம். அவருடைய வசதி பெருகலாம். ஆனால் அத்தொழிலினால் அவருக்குப் புகழும், சமூகத்துக்கு நல்லது செய்தோம் என்ற திருப்தியும் கிடைக்குமா? கட்டுமானத் தொழிலில்
ஒருவர் ஒரு தொழிலைச் செய்தால் அவருக்குப் பணம் கிடைக்கலாம். அவருடைய வசதி பெருகலாம். ஆனால் அத்தொழிலினால் அவருக்குப் புகழும், சமூகத்துக்கு நல்லது செய்தோம் என்ற திருப்தியும் கிடைக்குமா?
கட்டுமானத் தொழிலில் இருந்த நான், கல்லூரிகளை ஆரம்பித்ததற்குக் காரணம் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான்'' என்கிறார் வி.ஜி.ராஜேந்திரன்.
""சிவில் என்ஜினியரிங் படித்து முடித்த நான், முதலில் இரண்டாண்டுகள் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கட்டுமானத் தொழிலின் நுட்பங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். அப்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டது.
1989 இல் மனைவி இந்திரா பெயரில் "இந்திரா ஆர்கேட் அண்ட் எஸ்டேட்ஸ்' என்ற கட்டுமான நிறுவனத்தை ஆரம்பித்தேன். இரண்டே இரண்டு பணியாளர்கள். திருவல்லிக்கேணியில் அலுவலகம். முதலில் சின்னச் சின்ன வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். தெரிந்த நண்பர்கள் மூலம் தனி வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
1994 இல் கில் நகரில் ஃபிளாட்கள் கட்டித் தரும் பெரிய வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து, கிண்டி, நங்கநல்லூர் போன்ற இடங்களில் பெரிய புராஜெக்ட்கள் கிடைத்தன. கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் சிறுவீடுகளைக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நான், ஃபிளாட்ஸ் புரமோட்டராக மாறினேன்.
மேலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு இடம் ஒன்றை வாங்கித் தனி வீடு கட்டிக் குடியேறவே நடுத்தர மக்கள் விரும்பினார்கள். இப்போது ஃபிளாட்களையே விரும்புகிறார்கள். காரணம், ஃபிளாட்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடிகிறது. பாதுகாப்பும் அதிகம். எந்தப் பிரச்னை என்றாலும் எல்லாரும் சேர்ந்து தீர்வு காண முடியும்.
நான் படித்த சிவில் என்ஜினியரிங் படிப்பும், கட்டுமான நிறுவனத்தில் நான் வேலை செய்த அனுபவமும் எனக்குக் கை கொடுத்தன. ஆனாலும் மனதின் ஒரு மூலையில் இதைவிட இன்னும் சிறப்பாக - சமூகத்துக்குப் பயன்படும் வகையில் - ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
கல்லூரி ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். அதை என் மனைவியிடம் சொன்னவுடன் மிகவும் உற்சாகமாக வரவேற்றார். அவர் பி.எஸ்ஸி படித்தவர். அதுவரை வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால் அப்போது மிகுந்த ஈடுபாட்டுடன் கல்லூரி ஆரம்பிக்கும் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.
"இந்திரா எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் ட்ரஸ்ட்' மூலமாக, முதன் முதலில் 2004 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை, திருவள்ளூருக்கு 5 கி.மீ. அருகே உள்ள பாண்டூர் என்ற கிராமத்தில் ஆரம்பித்தோம். 2005 இல் எம்பிஏ, எம்சிஏ கல்லூரி. அதற்குப் பிறகு நர்சிங், பி.எட், எம்.எட் கல்லூரி என்று எங்கள் பணி தொடர்ந்தது. பிரியதர்ஷினி டென்டல் காலேஜையும் ஆரம்பித்தோம்.
எங்களுடைய பி.எட் கல்லூரியில் ஒவ்வோராண்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்கிறோம். அவர்கள் கற்பதற்குத் தேவையான தனிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம். அவர்களுக்குக் கட்டணச் சலுகையும் தருகிறோம். எங்கள் கல்லூரியில் படித்த பார்வையற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் முதல் வகுப்புகள் எடுத்துள்ளார்கள் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்
கொள்கிறேன்.
சென்னையிலிருந்து மட்டும் ஆயிரம் மாணவர்கள் வந்து எங்கள் கல்லூரியில் பயில்கின்றனர். திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். கல்லூரியின் நிர்வாகப் பணிகளை எல்லாம் என் மனைவி இந்திரா என்னுடன் இணைந்து சிறப்பாகச் செய்கிறார். அதனால்தான் இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது.
எங்கள் கல்லூரிகள் அமைந்துள்ள கிராமங்களைச் சுற்றியுள்ள மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பல பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 250 பேருக்கு அறுவை சிகிச்சை உட்பட இலவசப் பல் சிகிச்சை அளிக்கிறோம். பிற நோய்களுக்கு நாள்தோறும் 100 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கிறோம். வரும் ஆண்டுகளில் 150 படுக்கை வசதியுடன் கூடிய ஓர் இலவசப் பொது மருத்துவமனையை நிறுவி ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.
அதுமட்டுமல்ல, திருவள்ளூர் நகரத்தில் பல் சிகிச்சைக்கான ஆரம்பகட்ட சோதனைகளைச் செய்யும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம். அங்கே சோதனை செய்யப்பட்டவர்களை பேருந்தில் அழைத்துச் சென்று, எங்கள் மருத்துவமனையில் இலவச சிகிச்சை
அளிக்கிறோம்.
கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் எங்களால் முடிந்த சேவைகளை மக்களுக்குச் செய்வதில் எங்களுக்குக் கிடைக்கும் மனதிருப்திக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது.
என்றாலும் கட்டுமானத் தொழிலையும் தொடர்ந்து செய்து வருகிறேன். ஃபிளாட்களைக் கட்டிக் கொடுப்பதுடன் எங்கள் பணி முடிந்துவிட்டதாக நான் நினைப்பதில்லை. அதற்குப் பிறகு ஏதேனும் குறைபாடுகளை ஃபிளாட்களில் குடியேறிவர்கள் சொன்னால், உடனே அவற்றைச் சரி செய்து கொடுக்கிறோம்.
எனது பாட்டனார் டபிள்யூ.கே.தேவராஜமுதலியார் பஸ்களை வாங்கி ஓட்டினார். எனது தந்தை வி.குருநாதன் அரசுப் பணியில் இருந்தார். கட்டுமானத் தொழில், கல்லூரிகள் ஆரம்பித்தது எல்லாம் முதன்முறையாக, நான் மட்டுமே என் சொந்த முயற்சியில் செய்தவை.
இன்றைய இளம் தலைமுறையினர் என்னைப் போல ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, "என்னால் முடியும்' என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்களாலும் வெற்றியடைய முடியும். கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி அடைய முடியும்'' என்றார்.