பட்டாசுச் சத்தம்: கவிஞர் மா.உலகநாதன்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM
பட்டாசுச் சத்தம் பகர்வது
என்னவெனில்
விட்டது நரகாசுரன் தொல்லை இது
வெளிப்படை உண்மை! ஆனால்,
மண்ணில் நரகாசுரன்கள்
மலிந்து விட்டார்களே;
வெள்ளையில் கொள்ளை
வீழ்ந்தபாடில்லை:
கையூட்டு முக்காடைக்
களைந்த பாடில்லை;
பாயும் அன்பே காதலென
அறியாது,பேதைகள்
ஆயுதம் எடுப்பது அசரவேயில்லை;
உண்பது நாழி,உடுப்பது
இரண்டென்பதை உணரவேயில்லை;
உணரத் தலைப்பட்டால்
பட்டாசுச் சத்தம் இன்னும்
உச்சம்!
மாந்தர்க்குத் தேவையில்லை
அச்சம்!