பாடல் - 7
அம்மான், ஆழிப்பிரான் அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கை தலை பூசல் இட்டே
மெய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.
அம்மான், சக்ராயுதத்தை ஏந்திய பிரான், அவன் எங்கே, நான் எங்கே! 'கஜேந்திரன் என்கிற யானையின் துன்பத்தைத் தீர்த்தவனே' என்று கையைத் தலைக்குமேல் தூக்கி அவனை அழைத்தேன், உண்மையிலேயே அவன் மீது எனக்கு அன்பு ஏற்பட்டது, எம்பிரானும் எனக்கு அருள்செய்தான், (இழிவான நிலையில் உள்ள எனக்கே அவன் அருள்செய்தான் என்றால்), எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களும் உண்மையான பக்தியோடு வணங்கினால் போதும், அவனுடைய அருள் கிடைக்கும், அறிந்துகொள்ளுங்கள்.
******
பாடல் - 8
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழூஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்,
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல்மக்களும்
மேலாத் தாய், தந்தையும் அவரே இனி ஆவாரே.
சிறந்த தேவர்களூம், நிலத்தில் வாழும் தேவர்களான பக்தர்களும் விரும்பி வணங்குகிற திருமால், இன்றைக்கு என்னுடைய மனத்தில் பொருந்தினார், இனி, மீன் போன்ற பார்வையுடைய பெண்கள், பெரிய செல்வம், நல்ல மக்கள், சிறந்த தாய், தந்தை என எனக்கு எல்லாம் அவரே ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.