பாடல் - 1
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன் அடிக்கீழ் என்று
அருத்தித்து எனைத்து ஓர் பலநாள் அழைத்தேற்குப்
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்றன்
கருத்தை உற வீற்றிருந்தான் கண்டுகொண்டே.
‘எம்பெருமானே, என்னை விரும்பி உங்களுடைய பொற்திருவடிகளின்கீழ் இருத்துங்கள்’ என்று அப்பெருமானிடம் எத்தனையோ நாளாக வேண்டி அழைத்தேன், பொருத்தமான வாமனன் தானே வந்தான், என்னுடைய கருத்தை ஏற்றுகொண்டு, என்னைக் கண்டுகொண்டு வீற்றிருந்தான்.
பாடல் - 2
இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்து அற மன்னிப்
பெரும்தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான்
தரும் தான் அருள்தான் இனி யான் அறியேனே.
என்னுடைய ஏழை நெஞ்சை ஆளுகிற ஐந்து இந்திரியங்களும் திருந்தாதவை, தொடர்ந்து குற்றம் செய்கிறவை, அந்த ஐவரும் தேய்ந்து மறையும்படி எம்பெருமான் என்னைக் கண்டுகொண்டு இருந்தான்.
அன்றைக்கு, பெரிய காலையுடைய யானையாகிய கஜேந்திரனுக்கு அருள்செய்தான் எம்பெருமான், எனக்கு அவன் தந்த அருளோடு ஒப்பிடும்போது, கஜேந்திரனுக்குச் செய்த அருள் ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.