விஜயநகரப் பேரரசு - எஸ்.கிருஷ்ணன்; பக்.216; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-42009603.
பல்வேறு அரசியல், அந்நிய ஆதிக்க, போர் நெருக்கடிகளுக்கு இடையே தமிழகத்தில் ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசின் தோற்றம், மன்னர்கள், ஆட்சிமுறை, படைபலம், கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் உள்ளிட்டவை குறித்து இந்த நூல் விரிவாக அலசுவதோடு, அயல்நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்த பல்வேறு வரலாற்றாசிரியர்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளது.
தில்லியை ஆண்ட சுல்தான்கள், குல்பர்க்காவைத் தலைநகராகக் கொண்ட பாமினி அரசு ஆகிய இருபெரும் அரசுகளும், தென்னிந்தியாவில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருந்த விஜயநகரப் பேரரசுடன் அடிக்கடி போரிட நேர்ந்ததற்கு மதமும் ஒரு முக்கியமான காரணமாக இருந்துள்ளது. கோயில்கள் எதிரிகளால் தரைமட்டமாக்கப்பட்டன. விக்கிரகங்கள் கடத்தப்பட்டன. முன்னெச்சரிக்கையாக சில விக்கிரகங்கள் மறைத்து வைக்கப்பட்டன.
தங்களது சமய நம்பிக்கைகள் சிதைக்கப்படுவதை தாங்க இயலாத விஜயநகர அரசர்கள் வேறுவழியில்லாது எதிரிகளுக்கு பெரும் பொன், பொருளை அளித்து சமாதானத்தை நிலைநாட்டி தங்களின் குடிமக்களுக்கும், ஹிந்து சமயத்துக்கும் அரணாக நின்றனர்.
துரோகங்கள், பொறாமை, காட்டிக்கொடுத்தல்களால் பலியான விஜய நகரப் பேரரசு, இன்னும் சில காலம் நீடித்திருந்தால் பல்வேறு கோயில்களும், புராதான சின்னங்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். தமிழகத்தில் அந்நியரின் படையெடுப்பு அதிகம் நிகழாததற்கு விஜய நகரப் பேரரசும், அதைத் திறம்பட ஆண்ட மன்னர்களுமே முக்கிய காரணம். மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் உள்ள கோயில்கள் விஜயநகரப் பேரரசின் பெருமையை இன்றளவும் சுமந்து நிற்கின்றன. சுமார் 300 ஆண்டுகால தென்னிந்திய சரித்திரத்தை இந்நூல் எடுத்தியம்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.