இன்றைய தமிழ் சினிமா- முனைவர் அ.பிச்சை; பக்.334; ரூ.400; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-625 020; ✆ 90803 30200.
1984-இல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்ததால், சென்னையில் இருந்து சின்னாளபட்டிக்குச் சென்ற நூலாசிரியர் அங்கேயே குடிபெயர்ந்தார்.
அங்கும், பின்னர் மதுரையிலும் வசிக்கத் தொடங்கினார். இவர் தனது அனுபவத்தில் கிடைத்த திரை அனுபவம், முனைவர் பட்ட வழிகாட்டியாக தனது மாணவர்களின் திரைத் துறை தொடர்பான ஆய்வுகள், பத்திரிகைகளில் வாசித்த அனுபவம், திரைத்துறையினருடனான சந்திப்புகள், பிரபலங்கள் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் என்று பல வகைகளில் திரைத் துறைத் தகவல்களை மிகுந்த சிரத்தையோடு, தொகுத்து நூலாக்கியுள்ளார்.
திரைப்பட அறிமுகம், முக்கிய இயக்குநர்கள் குறித்த தகவல்கள், நடிகர்கள், திரைக்கதை- வசனம், திரையிசையும் பாடல்களும், ஒளிப்பதிவும் படத் தொகுப்பும், திரைப்பட விமர்சனங்கள், திரைப்படமும் பண்பாடும், இலக்கியமும் சினிமாவும், சமூகப் படங்கள், முக்கிய படங்கள், சினிமா சிந்தனைகள், உலக சினிமா உள்ளிட்ட 13 தலைப்புகளில் ஒட்டுமொத்தமாக, 'கோலிவுட்' குறித்த அனைத்து தகவல்களும் உள்ளங்கையில் வந்துவிட்டதோ என்று வாசித்து முடித்தவுடன் நினைக்கத் தோன்றுகிறது. பின்னிணைப்பாக, பார்க்கத்தக்க படங்கள் குறித்த தொகுப்பும் சிறப்பு.
எம்.ஜிஆர்., சிவாஜி, கே.பாலசந்தர், மணிரத்னம், மணிவண்ணன், பாரதிராஜா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் குறித்த ருசிகரத் தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. முக்கிய திரைப்படங்களில் விமர்சனங்களும் நூலில் இருக்கின்றன. தமிழ்த் திரையுலகம் குறித்து எண்ணற்ற நூல்களில் படித்தறிய வேண்டிய தகவல்கள் ஒற்றை நூலில் தொகுக்கப்பட்டுள்ளது என்பதே சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.