நான் கண்ட இந்தியா - ஹாலித் எடிப்; தமிழில் - இஸ்க்ரா; பக்.408; ரூ.450; கிழக்கு பதிப்பகம், சென்னை ✆ 044-4200 9603.
துருக்கிய பெண் எழுத்தாளர் ஹாலித் எடிப் 1935-ஆண்டு இந்தியாவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் தங்கினார். இந்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்று அறியப்பட்ட தருணம் அது. இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று, காந்தி உள்ளிட்ட பல ஆளுமைகளுடன் உரையாடிய அவரது அனுபவம், தனித்துவமான அவரது பார்வை ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல்.
'சலாம் இல்லத்திலிருந்து கண்டடைந்த இந்தியா', 'நெடுஞ்சாலையிலும் புறவழிச்சாலையிலும் கண்டடைந்த இந்தியா', 'உருக்குப் பானையில் இந்தியா' என மூன்று பாகங்களாக விரியும் இந்நூல், ஒவ்வொரு தலைப்பிலும் இந்தியாவின் பல்வேறு பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
காந்தியை முதல்முறையாகச் சந்தித்தது; காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது; நேரு, சரோஜினி நாயுடுவுடனான சந்திப்பு; இஸ்லாமியர்கள் குறித்த கூர்மையான அவதானிப்பு; காலனியாதிக்கம்; இரு தேசக் கொள்கை, பெரும்பான்மைவாதம்; மத அரசியல்; பெண்களின் நிலை என ஒவ்வொரு பக்கமும் கண்களை அகலமாகத் திறக்க வைத்து, இதயத்தில் ஆழமாக ஊடுருவுகிறது.
பல்வேறு காரணங்களால் இஸ்லாமியரான நூலாசிரியரின் மனதுக்கு மற்றெந்த நாடுகளை விடவும், இந்தியா நெருக்கமாகத் தோன்றியுள்ளது. இந்த அகநிலைப் பற்றுதலே இந்தியா குறித்து சுதந்திரமாக எழுத தன்னைத் தூண்டியதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாறு, அரசியல், சமூகம், மதம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயணம் செய்யும் மிக முக்கியமான வரலாற்றுப் பிரதியாகவும் இந்நூலைக் கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.