முகப்பு
தினம் ஒரு தேவாரம்

2. கூற்றாயினவாறு - பாடல் 3

அழிதல். கிள்ளப்பட்டதால் பிரம்மனின் உடலுடன் தொடர்பு இன்றி அழிந்த தலை.

Updated On : 29 செப்டம்பர், 2015 at 12:20 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:24 PM

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூசவல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண்தலை கொண்டு
அணிந்தீர் அடிகேள் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

பணிந்தார் = வழிபடும் அடியவர்.

பாற்றுதல் = போக்குதல், அழித்தல், கெடுத்தல்.

பிணிந்தார் = இறந்தவர்.

வெண்தலை = உலர்ந்த தலையோடு. உலர்ந்ததால் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து, வெண்மை நிறமாக மாறிவிட்டது.

படுதல் = அழிதல். கிள்ளப்பட்டதால் பிரம்மனின் உடலுடன் தொடர்பு இன்றி அழிந்த தலை. பிரம்மனின் செருக்கினை அழிப்பதற்காக அவனது தலையைக் கிள்ளிய சிவபெருமான், உலகெங்கும் சென்று பலி ஏற்பது, (அதாவது பிச்சை கேட்பது) தனது உணவுத் தேவைக்காக அல்ல. உயிர்கள், தங்களது ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மலங்களை, சிவபிரானிடம் பலியாகக் கொடுத்துவிட்டு உய்ய வேண்டும் என்ற ஆசையினால்தான், சிவபிரான் பலி ஏற்பதாகப் பெரியோர்கள் கூறுவார்கள்.

குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் முதல் பாடலில், சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானைக் குறிப்பிடுகிறார்.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்.

சமண சமயக் குருமார்களுடன் சுமார் நாற்பது ஆண்டுகள் பழகிய திருநாவுக்கரசருக்கு, சமணர்கள் தங்களது மதத்தினைப் பரப்ப தீவிரமான முயற்சிகள் எடுப்பார்கள் என்பதும், அவர்களது மதத்தில் சாராதவர்களை, தங்களுக்குப் பல்லவ அரசனிடம் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, எப்படியெல்லாம் தங்களது சமயத்துக்கு இழுப்பதற்கு முயற்சி செய்வார்கள் என்பதும் நன்றாகவே தெரியும். அவர்களது மதத்தில் குருவாக இருந்த தான் சைவ மதம் மாறியது அவர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்த அவர், அவர்கள் தனக்கு தீங்கிழைக்கக்கூடும் என்பதையும் உணர்ந்ததால்தான், துணிந்தே என்ற சொல்லை இங்கே பயன்படுத்தி, சமணர்களால் தனக்கு ஏற்படவிருக்கும் இடையூறுகளை எதிர்கொள்ளத் துணிந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஊழிக்காலத்தின் முடிவில் அனைத்து உயிர்களும் இறந்த நிலையில், இறந்த உடல்களின் சாம்பலைப் பூசிக்கொண்டு, இறந்தவர்களின் தலையினை மாலையாகக் கோர்த்து தனது கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு நடனம் ஆடுபவர் சிவபெருமான். சுந்தரரும், அஞ்சைக்களத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில், சிவபிரானை தலைக்குத் தலைமாலை அணிந்தவராகக் காண்கிறார். அலைக்கும் புலி என்று புலியின் கொலைத்தன்மை இங்கே குறிப்பிடப்படுகிறது. கதம் என்றால் சினம், கோபம் என்று பொருள். மகோதை என்பது தலத்தின் பெயர். அஞ்சைக்களம் என்பது கோயிலின் பெயர். கச்சு என்பது இடுப்பில் உடுத்தப்படும் ஆடை.

தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைகளத்து அப்பனே

ஊழிக்காலத்தில், கடல் நீர் பொங்கி உலகினை மூழ்கடிக்க, பிரம்மன், திருமால் உட்பட அனைவரும் இறக்க, பிரம்மன், திருமால் ஆகிய இருவரின் சடலங்களைத் தனது உடலில் அணிந்தவனாக, ஒடுங்கிய உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கும் எண்ணத்துடன் சிவபெருமான் வீணை வாசித்துக்கொண்டு இருப்பார் என்று கீழ்க்கண்ட பாடலில் அப்பர் பிரான் கூறுகிறார்.

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இரும் கடன் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும் கடன் மீள நின்று எம் இறை நல்வீணை வாசிக்குமே

பொழிப்புரை

ஊழிமுடிவினில் இறந்தவர்களின் உடல் சாம்பலை தனது உடலில் பூசிக்கொண்டு, விருப்பமுடன் எருதினை வாகனமாக ஏற்று உலகெங்கும் செல்பவரும், தனது கழுத்தினில் இறந்தவர்களின் தலையினை மாலையாக அணிந்தும் இருப்பவரும், கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் உறைபவரும் ஆகிய சிவபெருமானே, உம்மை வழிபடும் அடியார்களின் பாவங்களை நீக்கும் வல்லமை உடையவரே, கிள்ளப்பட்டதும் உலர்ந்ததால் வெண்மை நிறத்துடன் உள்ள பிரம்மனின் தலையில் பிச்சை ஏற்றுத் திரியும் பெருமானே, நான் மதம் மாறியதற்காக என் மீது கோபம் கொண்டு சமண சமயத்தவர் சூழ்ச்சி செய்வார்கள் என்பதை அறிந்தும், நான் மிகவும் துணிந்து உமக்கு அடிமையாக வாழ்வது என்று முடிவினில் உள்ளேன். ஆனால், கொடுமையான சூலை நோய் என்னை நெருப்புபோல் எரிக்கிறது. எனவே, இந்த சூலை நோயினை நீர்தான் தவிர்த்து எனக்கு அருள்புரிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.