முகப்பு
தினம் ஒரு தேவாரம்

3. நாமார்க்கும் குடியல்லோம் - பாடல் 2

போர்க்குணம் கொண்ட இடபம் (சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தாரை அழைத்துச் செல்லும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்)

Updated On : 2 அக்டோபர், 2015 at 4:05 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:28 PM

அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமிதேவி உடன் கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே
இகலுடைய விடை உடையான் ஏன்று கொண்டான் இனி ஏதும் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொற்கேட்கக் கடவோமே துரிசு அற்றோமே

விளக்கம்

அகலிடம் = அகன்ற பரப்பினை உடைய பூமி

இகலுடைய விடை = போர்க்குணம் கொண்ட இடபம் (சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தாரை அழைத்துச் செல்லும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்)

ஏன்று கொண்டான் = ஏற்றுக்கொண்டான்

அம்பலங்கள் = பொது மன்றங்கள்

துரிசு = குற்றம்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் என்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் கூறிய அப்பர் பிரான். விடையுடையான் ஏன்று கொண்டான், என்று இறைவன் தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்ட தன்மையை இந்த பாடலிலும் குறிப்பிடுகின்றார்.

அப்பர் பிரான் துறவு நிலை மேற்கொண்டதை விளக்கும் பாடலாகும். இல்லறத்தில் இருப்போர்கள் துறவிகளுக்கு ஐயம் இடுவதை தங்கள் கடமையாக கருதி வந்தமையால் தான் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே தனக்கு உணவு கிடைக்கும் என்பதால் அகன்ற உலகமே தனது ஊர் என்று கூறுகின்றார். மேலும் அந்நாளில் துறவிகளுக்கு அன்னம் அளித்த பின்னரே உணவு உண்பது மக்களின் வழக்கமாக இருந்தது என்பதையும் நாம் உணர்கின்றோம். துறவிகளும் வழிப்போக்கர்களும் தங்குவதற்காக பொது மன்றங்கள் இருந்த காலம். எனவே அத்தகைய பொது மன்றத்தில் தான் இரவு தங்கினால் பூமாதேவி என்னை புரட்டித் தள்ளமாட்டாள் என்று கூறும் அப்பர் பிரான், துறவிகளுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நிலையை இங்கே எடுத்துரைக்கின்றார்.

பொழிப்புரை

நாம் துறவி என்பதால் பரந்த பூமி முழுவதும் எமக்கு இடமாகும்; நாம் எங்கும் செல்லலாம்; அனைத்து ஊர்களிலும் தாங்கள் சமைத்த உணவினை உண்பதற்கு முன்னர் துறவிகளுக்கு படைத்துவிட்டு உணவு உண்பதை பழக்கமாகக் கொண்ட இல்லறத்தோர்கள் இருப்பதால் எமக்கு உணவினை பிச்சையாக இடுவதை எவரும் தவிர்க்க மாட்டார்கள்; எல்லா ஊர்களிலும் உள்ள பொது மன்றங்கள் யாம் தங்கும் இடங்களாகும்; நான் பூமியில் எங்கு படுத்தாலும், பூமிதேவி அதனை ஏற்றுக் கொண்டு என்னை புரட்டி எறியாமல் இருப்பாள்; இந்த வார்த்தை பொய்யல்ல மெய்யாகும். போர்க்குணம் கொண்ட இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதால், இனி எமக்கு எந்த குறையுமில்லை. எங்களது துன்பங்கள் எல்லாமும் தீர்ந்தன. ஆதலின், சிறந்த உடைகளை உடுத்துப் பொன் ஆபரணங்களைப் பூண்டு ஊர் ஊராகத் திரியும் அரசர்களின் சொற்களை ஏற்று நடக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.