46. மண்ணளந்த மணிவண்ணர் - பாடல் 10
சிவந்த கண்களை உடைய ராமபிரான்
செங்கண் மால் சிலை பிடித்துச் சேனையோடும் சேது
பந்தனம் செய்து சென்று புக்குப்
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன்
நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொரு தன் திருவிரலால் இறையே ஊன்றி அடர்த்து
அவற்கே அருள் புரிந்த அடிகள் இந்நாள்
வங்கமலி கடல் புடை சூழ் மாடவீதி வலம்புரமே புக்கு
அங்கே மன்னினாரே
விளக்கம்
புகல் = அடைக்கலம். புகலால் வென்ற என்று தன்னிடம் சரண் அடைந்த சுக்ரீவன் மற்றும் விபீடணன் ஆகியோரின் துணை கொண்டு அரக்கன் ராவணனை, ராமபிரான் வென்றதை, அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பெரிய முயற்சிகள் செய்து, பலரின் துணையுடன் அரக்கன் ராவணனை, ராமபிரான் வென்றதை குறிப்பிடும் அப்பர் பிரான், இதே பதிகத்தில் மிகவும் விளையாட்டாக தனது கால் பெருவிரல் ஒன்றினை ஊன்றி அரக்கனது தலை முடிகள் விழுமாறு நெரித்த செய்கையை குறிப்பிட்டு, பெருமானின் வலிமையை நமக்கு உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
சிவந்த கண்களை உடைய ராமபிரான், தனது வானர சேனையோடும் சென்று, இலங்கையைச் சூழ்ந்திருந்த கடலின் மீது அணை கட்டி அதன் மீது நடந்து சென்று, தன்னிடம் சரணடைந்த சுக்ரீவன் மற்றும் விபீடணன் ஆகியோரின் உதவியுடனும், தான் கையில் ஏந்திய வில்லினை பயன்படுத்தியும், பல போர்கள் செய்து அரக்கன் ராவணனை வென்றார். ஆனால், கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கனது பத்து தலைகளும் பொடியாகும் நிலைக்கு, தனது கால் பெருவிரல் ஒன்றினை கயிலை மலையின் மிகவும் லேசாக ஊன்றி, அரக்கனை வருத்தியவர் சிவபெருமான். பின்னர் அந்த அரக்கன் சாமகானம் பாடியதற்கு இரங்கி அவனுக்கு பல விதங்களிலும் அருள் செய்த பெருமான், கப்பல்கள் நிறைந்த கடலால் ஒரு சூழப்பட்டதாகவும், மாட வீதிகளைக் கொண்டதாவும் விளங்கும் தலமாகிய வளம்புரத்தில் இன்று புகுந்து அங்கே நிலையாக உறைகின்றார். ,
Advertisement
முடிவுரை
பெருமானின் அழகில் மயங்கிய அப்பர் நாயகி, பெருமான் தன் முன்னர் காட்சி அளித்தது போன்றும், ஆக்கூர் செல்வதாக சொல்லி மறைந்தது போன்றும், பெருமான் வாய் திறந்து தன்னிடம் பேசியதாகவும், தன்னை வாவா என்று அழைத்த பெருமான் தன்னைப் புறக்கணித்துச் சென்றதாகவும், ஆரூர், காழி மற்றும் இடைமருது செல்பவர் போன்று போக்கு காட்டியதாகவும், தன்னை நோக்கி புன்முறுவல் பூத்த பெருமான் அதன் பின்னர் தன்னை நோக்காது சென்றது போன்றும், பெருமானிடம் உங்களது ஊர் என்ன என்று கேட்டதற்கு தனது ஊரின் பெயரைச் சொல்லாமல் வலம்புரத்தை விட்டு அகன்றது போன்றும், ஒரு தலத்தைத் தனது ஊர் என்று சொல்லாமல் பல தலங்களும் தன்னுடைய ஊர் என்று சொல்லி அங்கேதான் செல்வேன் என்று சொன்னதாகவும், ஒன்றோடொன்று பொருந்தாத செய்கைகள் உடையவராக பெருமான் இருந்தது போன்றும், கற்பனை செய்த அப்பர் நாயகி, தனது உள்ளத்தைக் கவர்ந்த பெருமான் வலம்புரம் தலத்தில் உறைவதாக சொல்லும் சுவையான அகத்துறை வகையில் அமைந்த பதிகம். தன்னை ஓர் பெண்ணாக பாவித்துக்கொண்டு, பெருமான் மீது தான் கொண்ட எல்லையற்ற அன்பினை அப்பர் பிரான் உணர்த்தும் பதிகம். பதிகத்தில் உணர்த்தப்படும் நாயகி போன்று நாமும் பெருமான் மீது என்றும் மாறாத, ஆழ்ந்த காதல் கொள்ளவேண்டும் என்ற அப்பர் பிரானின் நோக்கத்தை புரிந்துகொண்டு, நாமும் பெருமானின் மீது நமக்குள்ள விருப்பத்தை வளர்த்துக்கொண்டு, அவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவோமாக.