47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 1
சிவபிரானது திருப்பாதமே சரணம் என்று
(சாய்க்காடு – நேரிசை)
முன்னுரை
சாய்க்காடு தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்களில் ஒரு பதிகம் இது. சிவபிரானின் அருட்செயல்களை விவரித்து இறைவன்பால் அன்பு செலுத்த நம்மை அப்பர் பிரான் அழைத்துச்செல்லும் பதிகம் இது. இறைவன்பால் மிகுந்த அன்பு கொண்டு, வேறு வேறு விதங்களில் வழிபட்ட அடியார்கள் சிவபெருமானின் அருள் பெற்றமை நமக்கு உணர்த்தப்படுகின்றது. எனவே, எந்த முறையில் இறைவனை வழிபடுகின்றோம் என்பது முக்கியமல்ல; எத்தகைய அன்பு கொண்டு இறைவனை வழிபடுகின்றோம் என்பதுதான் இங்கே முக்கியம் என்று பதிகத்தின் மையக் கருத்தாக உணர்த்தப்படுகின்றது.
பாடல் 1
Advertisement
தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செலலும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே
விளக்கம்
தோடு = இதழ். தோடு உலா மலர் = இதழ்கள் நெருங்கிய மலர், அன்று பூத்த மலர், புதியதாக பூத்த பூக்களில் காணப்படும் இதழ்களின் நெருக்கம், பழைய பூக்களில் இல்லாததை நாம் உணர்கின்றோம். இதழ்கள் நெருங்கிய மலர்கள் என்று குறிப்பிட்டு, அன்று பூத்த மலர்கள் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். வீடு நாள் = உடலை விட்டு உயிர் பிரிந்து செல்லும் நாள், இறக்கும் நாள். பாடு = அருகில். தொழுதெழு மார்க்கண்டேயன் என்று கூறுவதை, தூக்கத்திலிருந்து எழுந்த போதே சிவபிரானை நினைத்தவாறே எழும் மார்க்கண்டேயன் என்று விளக்கம் கூறுவார்கள். இறைவனைப் பற்றிய சிந்தனை நமது மனதினில் எப்போதும் நிறைந்து இருந்தால்தான், நமது எண்ணங்கள் எப்போதும் இறைவனைப் பற்றியே இருக்கும். இறைவனைப் பற்றிய இடைவிடாத சிந்தனைதான் நம்மை அந்த நிலைக்கு உயர்த்தும். அப்பர் பிரான் அவ்வாறு இருந்தது, அவரது பல பாடல்களில் வெளிப்படுகின்றது. கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய இரண்டு திருத்தாண்டகங்களிலின் அனைத்துப் பாடல்களிலும், இறைவன் தனது எண்ணமாக பரிமளித்து இருப்பதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அத்தகைய பாடல் ஒன்று (6.65.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் அன்பு வைக்கும் அடியார்கள் பால் நேசம் கொள்ளும் சிவபெருமான், தன்னிடம் அன்பு பாராட்டாத நீசர்களை நினைத்து மனம் அருவருத்து கூசுவார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மேலும் இறைவனை வணங்கி வழிபட, நாம் ஏதும் நாணம் கொள்ளவேண்டியதில்லை. நம்மை விட அனைத்து வகையிலும் பெருமை வாய்ந்த, கருணையே வடிவான ஈசனை வணங்கவும் வாழ்த்தவும் நாம் எதற்காக நாணம் கொள்ளவேண்டும். அத்தகைய நாணம் ஏதும் இன்றி, நாம் இறைவனை வழிபட்டால், இறைவன் நமது நெஞ்சினில் குடியிருப்பான் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன் பால் இல்லாத நெஞ்சத்து
நீசர் தம்மைக்
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடி கொண்ட குழகன்
காண் அழகார் கொன்றை
வாசன் காண் மலைமங்கை பங்கன் தான் காண் வானவர்கள்
எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
ஈசன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண்
அவன் என் எண்ணத்தானே
பொழிப்புரை
அன்று பூத்த, இதழ்கள் நெருங்கி அமைந்த மலர்கள் கொண்டு, தினமும், இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்த மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிவுடைந்த நிலையில், பொய்யான உடலிலிருந்து அந்த சிறுவனின் உண்மையான, நிலையான உயிரினைப் பிரித்து எடுத்துச் செல்வதற்காக, காலன் சிறுவனை நெருங்கினான். காலன் தனது அருகில் வருவதைக் கண்டு அச்சம் கொண்ட சிறுவன், சிவபிரானது திருப்பாதமே சரணம் என்று அவரது உருவத்தைத் தழுவிக்கொண்டார். உடனே, காலன் மாய்ந்து கீழே விழுமாறு அவனை உதைத்து, சிறுவனைக் காப்பாற்றியவர், சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.