47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 2
வாசுகி பாம்பினை கயிறாக நெருக்கி
வடம் கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையராகித்
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே
விளக்கம்
தடம் கடல் = பெரும் கடல், பாற்கடல். கெழு = நெருங்கி பொருந்திய.
பொழிப்புரை
வாசுகி பாம்பினை கயிறாக நெருக்கி கட்டப்பட்ட மந்திர மலையை மத்தாக பயன்படுத்தி, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, கடலிலிருந்து கொடிய கரிய நஞ்சு எழுந்தது. அவ்வாறு எழுந்த நஞ்சினைக் கண்டு, திருமால், பிரமன் உட்பட பல தேவர்களும் மிகவும் பயந்து, சிவபெருமானை அணுகி, நீரே எங்களுக்கு அடைக்கலம் தரவேண்டும் என்று வேண்டியபோது, அவர்களுக்கு அருள்புரிய வேண்டி, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அனைவரையும் காப்பாற்றியவர், சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.
Advertisement