26. அன்னம் பாலிக்கும் - பாடல் 9
காண முக்தி அளிப்பது தில்லை என்பது ஆன்றோர் வாக்கு. தில்லைத் திசையை நோக்கித் தொழுதாலே நமது வினைகள் நம்மை விட்டு அகன்றுவிடும் என்பது நாவுக்கரசரின் வாக்கு.
பாடல் 9
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர் தம்
வல்லை வட்டம் மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கை தொழுவார் வினை
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே

விளக்கம்

வட்டப்பட வாங்கி = வளைத்து. வில் எப்போதும் வளைந்துதான் இருக்கும். சிவபெருமான் மேருமலையினை, வில்லாக வளைத்த செய்கையினை குறிப்பதற்காக வில்லை வட்டப்பட வாங்கி என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். வல் = விரைவு. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக பறந்து செல்லும் ஆற்றல் படைத்த கோட்டைகள், வட்ட வடிவில் அமைந்த கோட்டைகள் என்பதால் வல்லை மதில் வட்டம் என்று கூறுகின்றார். மூன்று கோட்டைகளையும் ஒரே சமயத்தில் அழித்தவன் என்பது உடன் மாய்த்தவன் என்று தொடரால் உணர்த்தப்பட்டுள்ளது. ஒல்லை = விரைவு.

காண முக்தி அளிப்பது தில்லை என்பது ஆன்றோர் வாக்கு. தில்லைத் திசையை நோக்கித் தொழுதாலே நமது வினைகள் நம்மை விட்டு அகன்றுவிடும் என்பது நாவுக்கரசரின் வாக்கு.

இந்த பாடல் நமக்கு ஆதி சங்கரரின் சிவானந்த லஹரியின் தொண்ணூற்று இரண்டாவது பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் ஆதி சங்கரர், சிவபிரானுடன் தான் கொண்டுள்ள இணைப்பினால், தனது பாவங்களும், கெடுதல் செய்யக்கூடிய தலையெழுத்துக்களும், துரதிர்ஷ்டமும் வெளியே தள்ளப்பட்டு விட்டதாக கூறுகின்றார்.

தூரீக்ருதானீ துரிதானி துரக்ஷராணி

தௌர்பாக்ய துக்க துரஹங்க்ரிதி துர்வசாம்ஸி

ஸாரம் த்வதீய சரிதம் நிதாரம் பிபந்தம்

கௌரீச மாமிஹ ஸமுத்தர ஸத்கடாக்ஷை

தில்லை நகரம் இருக்கும் திசை நோக்கித் தொழுதால், நமது வினைகள் நம்மை விட்டு ஓடிவிடும் என்று இந்தப் பாடலில் கூறும் அப்பர் பிரான், இத்தகைய சிறப்பு வாய்ந்த தில்லை நகரின் பெருமைகளை நாம் பேச வேண்டும் என்பதை திருவாவடுதுறை பதிகத்தின் ஒரு பாடலில் (4.57.4) உணர்த்துகின்றார்.

பெருமை நன்றுடைய தில்லை என்று நான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏற மாட்டேன்
கருமை இட்டாய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன் நான்
அருமையா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே

இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு மணிவாசகரின் கண்டப்பத்து பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டும். இந்த பாடலில் மணிவாசகர், வேதங்களும் தில்லை நகரின் சிறப்பினை எடுத்துக் கூறி தொழுகின்றன என்று கூறுகின்றார். கேதங்கள் என்றால் துன்பங்கள் என்று பொருள்.

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே

பொழிப்புரை

மேருவாகிய மலையினை வில்லாக வளைத்து, திருபுரத்து அரக்கர்களின் வலிமை வாய்ந்து, வட்ட வடிவில் அமைந்து எப்போதும் திரிந்துகொண்டே இருக்கும் மூன்று கோட்டைகளையும், ஒரே சமயத்தில் அழித்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள தில்லைத் தலம் அமைந்துள்ள திசை நோக்கித் தொழும் அடியார்களின் வினைகள், அவர்களிடமிருந்து மிக விரைவாக விலகி ஓடும் என்பது உண்மை.

Advertisement