27. நன்று நாள் தொறும் - பாடல் 5
பொன்னார் என்ற சொல் பொனார் என்று திரிந்துள்ளது. நம்பன் என்றால் விரும்பத்தக்கவன் என்று பொருள். நம்பிக்கையுடன் தன்னைத் தொழுது
பாடல் 5
துன்பம் இல்லைத் துயர் இல்லையாம் இனி
நம்பனாகிய நன்மணி கண்டனார்
என் பொனார் உறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே

விளக்கம்

பொன்னார் என்ற சொல் பொனார் என்று திரிந்துள்ளது. நம்பன் என்றால் விரும்பத்தக்கவன் என்று பொருள். நம்பிக்கையுடன் தன்னைத் தொழுது வணங்கும் அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதால், சிவபெருமான் அனைவருக்கும் நம்பத் தகுந்தவனாக, நம்பனாக விளங்கும் தன்மை நூற்றுக்கும் அதிகமான தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய பாடல்களில் சில பாடல்களை நாம் இங்கே காண்போம்.

மதுரையிலிருந்து சோழநாடு திரும்பி வரும் வழியில், கொள்ளம்பூதூர் என்ற தலத்திற்கு சம்பந்தர் சென்றபோது, காவிரியின் கிளை நதியாகிய முள்ளி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காரணத்தால், அவரால் நதியைக் கடந்து திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. நதியில் ஓடிய வெள்ளம் மற்றும் சுழன்று சுழன்று அடித்த காற்றின் நிலையைக் கருத்தில் கொண்டு, ஓடக்காரர்கள் அனைவரும் ஓடங்களைத் துறையில் கட்டிவிட்டு, தத்தம் வீட்டிற்கு சென்று விட்டனர். இறைவனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, ஓடத்தில் தொண்டர்களுடன் அமர்ந்து கொட்டமே கமழும் என்று தொடங்கும் தேவாரப் பாடலை சம்பந்தர் பாட, எவரும் துடுப்பு வீசாத போது ஓடம், கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தைக் கடந்து அடுத்த கரைக்கு அனைவரையும் அழைத்துச் சென்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், தனது நம்பிக்கைக்கு உரிய சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் நம்பனே என்று சம்பந்தர் அழைப்பதை நாம் காணலாம். இந்த பதிகத்தின் (3.06) இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டகம் = வயலின் வெளியே நீர் தேங்கி இருக்கும் இடம்.

கோட்டகக் கழனி கொள்ளம்பூதூர்
நாட்டகத்து உறை நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே

தன் மீது நம்பிக்கை வைத்து நம்பா என்று அழைத்துத் தொழும் அடியார்களின் பாவங்களைத் தீர்ப்பவர் பழன நகரத்து பரமனார் என்று திருப்பழனம் பதிகத்தின் முதல் பாடலில் (1.67.1) இங்கே குறிப்பிடத் தக்கது.

வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

கோட்டாறுத் திருப்பதிகத்தின் ஒரு பாடலில் (2.52.4), ஞான சம்பந்தர் நம்பன் என்று பணிந்து வணங்கும் அடியார்களுக்கு அருள் செய்பவன் என்று கூறி, பெருமானிடம் நம்பிக்கை வைத்து வணங்குதலின் பலனை உணர்த்துகின்றார். வம்பு = நறுமணம். கோதை = அழகிய கூந்தல், இங்கே அழகிய கூந்தலை உடைய உமையம்மையைக் குறிக்கின்றது. கொம்பு = கொடி. கெண்டு = கிளரும்.

வம்பு அலரும் மலர்க் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவளத் திருமேனி வெண்ணீறு அணி செல்வனும்
கொம்பமரும் மலர் வண்டு கெண்டும் திருக் கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள் செய் எங்கள் நாதனே

நமச்சிவாய மந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அந்த மந்திரத்தைத் தங்கள் நாவினால் நவிற்றும் அடியார்களுக்கு, நறுமணம் கமழும் அன்றலர்ந்த மலர்களில் உள்ள தேன் போன்று இனியவனாக இருப்பவன், உலகத்திற்கு செம்பொன் திலகமாகத் திகழ்பவனும் அனைவராலும் நம்பி விரும்பப்படுபவனும் ஆகிய சிவபெருமான் என்று சம்பந்தர் சொல்லும் பாடல் நமச்சிவாயப் பதிகத்தின் இரண்டாம் (3.49.2) பாடலாகும். நவிற்றுதல் = உச்சரித்தல்.

நம்புவாரவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே

ஆலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.68.7), அப்பர் பிரான், தான் வாழ வேண்டிய நாட்கள் பல கொண்டிருந்த இயமனை உதைத்து வீழ்ச் செய்த நம்பர் என்று குறிப்பிடுகின்றார். தனக்கு குறிப்பிட்ட வாழ்நாட்கள் வெகு விரைவில் முடியப்போகின்றது என்று தெரிந்த பின்னரும், மிகுந்த நம்பிக்கையுடன் தான் தினமும் செய்து வந்த சிவவழிபாட்டினைத் தொடர்ந்து செய்து வந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாளைப் பறிக்க வந்த இயமன், மிகுந்த வாழ்நாளைக் கொண்டவனாக இருந்தான். ஆயினும் இயமனது காலினை உதைத்து, சிறுவன் மார்க்கண்டேயனைக் காப்பாற்றியவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். வாழ்நாள் இல்லாது இருந்த சிறுவனுக்கு எல்லையில்லாத வாழ்நாட்களும், அதிகமான வாழ்நாட்களைக் கொண்டிருந்த உடனே இயமன் மடிந்து கீழே விழுமாறும் இறைவனின் அருளினார் என்று நயம்பட கூறுவதை நாம் உணரலாம். பெருமானின் பாதங்களுக்கு தாமரைச் தண்டினை உவமையாக கூறி, பெருமை படைத்த சேவடிகள் என்று கூறுகின்றார். நாளுடைக் காலன் என்பதற்கு, ஒவ்வொரு உயிரின் வாழ்நாட்களை அறிந்து, வாழ்நாள் முடியும் தருவாயில் அந்த உயிரினை உடலிலிருந்து பிரிக்கும் செயலைத் தனது கடமையாக கொண்ட காலன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.

தாளுடைச் செங்கமலத் தடம் கொள் சேவடியார் போலும்
நாளுடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய
ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.51.8) நம்பர் என்று இறைவனை குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமானின் இரண்டு கருணைச் செயல்களை குறிப்பிடுகின்றார். பெருமானின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த விடத்திலிருந்து, தங்களைக் காக்குமாறு, திருமால் பிரமன் இந்திரன் உட்பட பல தேவர்களும் வேண்டியபோது, அந்த நஞ்சினை அமுதம் உண்பது போன்று மிகுந்த விருப்பத்துடன் உண்டு, உலகங்கள் அனைத்தையும் காத்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படும் முதல் நிகழ்ச்சி. இரண்டாவது நிகழ்ச்சி அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி. பல வருடங்களாக சமண சமயத்தைச் சார்ந்து வாழ்ந்த வந்த தனது தம்பியின் மனதினை சிவபெருமான் ஒருவர் தான் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் சிவபெருமானிடம் வேண்டிய திலகவதியாரின் நம்பிக்கை வீண் போகாத வண்ணம், உமது தம்பிக்கு சூலை நோய் கொடுத்து அவனை சைவ மதத்திற்கு மாற்றுவேன், நீ கவலையை விடுப்பாயாக என்று கனவின் கண் கூறிய சிவபெருமான் தான், தன்னை கொடிய சொற்களைப் பேசும் சமணர்களின் சிறையிலிருந்து தன்னை மீட்டார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவதை நாம் உணரலாம்.

அஞ்சைக்களத்துள்ளார் ஐயாற்றுள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார் தாம்
நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சரத்து உள்ளார் நாரையூரார்
வெஞ்சொல் சமண்சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே

திரிபுரத்து அரக்கர்கள் வேதநெறியில் நின்று, பெருமானை வழிபாட்டு இருந்த நாள் வரை, அவர்களுடன் போருக்கு செல்லாத சிவபெருமான், அவர்கள் மனம் பேதலித்து சிவநெறியை நிந்திக்கத் தொடங்கிய பின்னர், அவர்கள் மீது போர் புரிந்து அழித்தார் என்பதை உணர்த்தும் வண்ணம், நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த வில்லான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் வலிவலம் பதிகத்தின் முதல் பாடலை (6.48.1) நாம் இங்கே காணலாம்.

நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேலானான் காண் மெல்லியலாள் பாகன் காண் வேத வேள்விச்
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்லை வான் ஈய
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

நாரையூர் நன்னகரில் தான் கண்ட நம்பன் என்று ஒரு பாடலில் (6.74.10) கூறும் அப்பர் பிரான், நம்பன் என்று அழைத்தற்கு பொருத்தமாக. பெருமான் மீது நம்பிக்கை வைத்து வழிபட்ட மூவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றார். மீளா அடிமையாக தன்னை ஆட்கொண்டதையும், என்றும் மாளாமல் சிரஞ்சீவியாக இருக்கும் நிலையினை சிறுவன் மார்க்கண்டேயனுக்கு அருளிய செயலையும், தனது தோள் வலிமையும் தாள் (கால்கள்) வலிமையும் குன்றிய நிலையில் மலையின் கீழ் அமுக்குண்டு கூழாக மாறவிருந்த நிலையில் தான் நம்பிக்கையுடன் சாமகானம் இசைத்த அரக்கன் இராவணனுக்கு அதிகமான வாழ்நாளும் வாளும் கொடுத்து அருள் புரிந்த செய்கையும் இந்த பாடலில் கூறப்படுகின்றன. வெளி செய்த வழிபாடு = அறிவு ஒன்றி செய்யப்படும் வழிபாடு. மேவுதல் = விரும்புதல்.

மீளாத ஆள் என்னை உடையான் தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே
நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

திருக்கேதாரத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.78.3) ஒரு பாடலில் சுந்தரர், முனிவர்கள் பெருமான் மீது நம்பிக்கை கொண்டு விரும்புவதாக கூறுகின்றார். கொம்பு = யோக தண்டம். ஒருக்கு காலர்கள் என்ற சொற்றொடர் ஒருக்காலர் என்று திரிந்தது. ஒருக்கு = ஒடுக்கும். கால் = காற்று. மூச்சினை ஒருவழிப்படுத்தும் தவசிகள்: துறவிகள், இரவும் பகலும் இருக்கு மந்திரத்தைச் சொல்லியவாறு நம்பன் என்றும் நம்மை ஆளும் பெருமான் என்றும் சிவபெருமானை மலர்கள் தூவி வழிபடும் தன்மை இந்த பாடலில் கூறப்படுகின்றது. யானைகள் கூட்டமாக நின்று, தங்களது தும்பிக்கையால் நீரினை இறைத்து விளையாடும் காட்சி இங்கே உணர்த்தப்படுகின்றது.

கொம்பைப் பிடித்து ஒருக்காலர்கள் இருக்கால் மலர் தூவி
நம்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்பக் களிற்று இனமாய் நின்று சுனை நீர்களைத் தூவிச்
செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே

கயிலாயத்தில் நந்தவனத்திற்கு பூப்பறிக்கச் சென்றபோது அங்கே வந்த பார்வதி தேவியின் தோழியர்களைக் கண்டு ஒரு நொடி மனம் பேதலித்த குற்றத்திற்காக, மண்ணுலகில் அவதரிக்குமாறு பெருமானால் சுந்தரர் பணிக்கப்பட்டபோது, மண்ணுலக மாயைகளில் தான் மயங்கிவிடாமல் இருக்க, உரிய நேரத்தில், சிவபெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று சுந்தரர் வேண்டினார். அந்த வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமான், சுந்தரருக்கு திருமணம் நிகழவிருந்த சமயத்தில் அவரைத் தடுத்து ஆட்கொண்டதை குறிப்பிடும் பாடலில், அன்று வெண்ணெய்நல்லூரில் ஆட்கொண்ட நம்பனே என்று சொல்வதை நாம் திருமுல்லைவாயில் பதிகத்தின் பதிகத்தின் ஒரு பாடலில் (7.69.8) காணலாம்.

நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

ஞானசம்பந்தப் பெருமான், தான் எப்போதும் அம்மி மிதித்து அருந்ததி காட்டி பல சடங்குகள் செய்து நடைபெறும் திருமண வாழ்க்கையினை வேண்டாது இருந்தபோதிலும், எனது விருப்பத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் எனக்கு திருமண வாழ்க்கை அமையுமாறு செய்தது ஏன், நல்லூர்ப் பெருமண நம்பானே என்று அழைத்து வேண்டுவதை இந்த பாடலில் நாம் உணரலாம். பெருமான் அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்து, அவருக்கும், அவரைச் சார்ந்த அனைவர்க்கும், அந்த திருமணத்தைக் காண வந்திருந்த அனைவருக்கும், உடனே முக்தி அருளியது பின்னர் நிகழ்ந்த வரலாறு. நம்பன் என்று அழைத்த அடியார்களின் நம்பிக்கை வீண் போகாமல் பெருமான் அருள் புரிந்த செயல்களில் இதுவும் ஒன்றாகும்.

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே

பொழிப்புரை

நம்பனும், நல்ல நீலமணியின் நிறத்தில் அமைந்த கழுத்தினை உடையவனும், எனக்கு பொன் போன்று மிகவும் அருமையானவனும், வேட்கள நகரத்தில் உறைபவனும், இன்பமே வடிவாக இருப்பவனும் ஆகிய இறைவனின் சிவந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடும் அடியார்களுக்கு, அவர்களது வாழ்க்கையில் துன்பமும் அதனால் விளையும் துயரமும் இருக்காது.

Advertisement