18. வண்ணங்கள் தாம் பாடி - பாடல் 3
பெண்களுக்கு அழகு அவர்களது அடக்கமான குணம். சிவபிரானைக் காணும் வரை, இந்தப் பெண்மணியும் அவ்வாறே,
பாடல் 3
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்திக் கடிய
விடையேறிக் காபாலியார்
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும்
இடக் கொள்ளார் போவார் அல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார் பார்ப்பாரைப்
பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம்
அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே

விளக்கம்

கட்டங்கம் = மழு. இட்டங்கள் = விருப்பத்தை ஏற்படுத்தும் மொழிகள். பட்டிமை = நெறியற்ற சொற்கள். படிறு = வஞ்சனை. பரிசு = தன்மை. நிறை = அடக்கமான குணம்.

பெண்களுக்கு அழகு அவர்களது அடக்கமான குணம். சிவபிரானைக் காணும் வரை, இந்தப் பெண்மணியும் அவ்வாறே, எந்த ஆடவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல், இருந்துவந்தாள். ஆனால் சிவபிரானைக் கண்ட பின்னர், அவரது அழகினில் தனது மனதினைப் பறிகொடுத்த இந்த அப்பர் நாயகி, தனது அடக்க குணத்தைக் கைவிட்டு, சிவபிரானை ஏறிட்டுப் பார்த்தாக அவளே சொல்கின்றாள். இந்த பாடல் நமக்கு அப்பர் பிரானின் மற்றொரு பாடலை (சீர்காழி பதிகத்தின் முதல் பாடலை -- 5.45.1) நினைவூட்டுகிறது. இந்த பாடலில், தாய் தனது பெண்ணிடம், பெண்ணுக்கு உரிய இலக்கணத்துடன் வீட்டினில் அடக்கமாக இருக்க வேண்டும் என்று கூற அதற்கு, சிவபிரான் பால் காதல் வயப்பட்ட அந்த பெண், தான் சிவபிரானுக்குத் தோழியாக இருப்பேன் என்று தீர்மானம் செய்ததாகவும், தாயின் நீதிச்சொற்கள் தனக்குத் தேவையில்லை என்றும் கூறுகிறாள். இயன்று = இயல்பினை மேற்கொண்டு.

மாது நீ இயன்று மனைக்கு இரு என்றக்கால்
நீதி தான் சொல நீ எனக்கு ஆர் எனும்
சோதியார் தரு தோணிபுரத்தவர்க்குத்
தாதி ஆவன் என்னும் என் தையலே

பொழிப்புரை

கட்டங்கம் எனப்படும் மழுப்படையைக் கையில் ஏந்தி, விரைந்து செல்லும் இடபத்தின் மேல் ஏறிக்கொண்டு வந்த காபாலியார், எனது இல்லம் புகுந்தார்; அவ்வாறு புகுந்த அவர், நான் அளித்த உணவினை ஏற்றுக்கொள்ளாது இருந்தார்; ஆனால் அவர் எனது வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லாமல், எனக்கு அவர் பேரில் விருப்பம் ஊட்டும் சொற்களைப் பேசியவராக இருந்தார். இவ்வாறு நெறியற்ற சொற்களையும், வஞ்சனையான சொற்களையும் பேசிய அவர் நின்ற தோரணை மிகவும் அழகாக, அவரை பார்க்கும் பெண்கள் தங்கள் அடக்க குணத்தைக் கைவிட்டு, அவர் மீது காதல் கொள்ளும்படிச் செய்வதாக இருந்தது. நான் அவருக்கு அளித்த உணவுகளைத் தொடாமலே இருந்த அவர், தனது மனக்கருத்து என்ன என்பதையும் சொல்லாதவராக இருந்த, ஆமாத்தூர் அழகியர் மிகவும் அழகியரே.

Advertisement