முகப்பு
தினம் ஒரு தேவாரம்

42. ஆதியில் பிரமனார் - பாடல் 5

திருமாலுக்கு, சக்கரத்தை அருளியவர்,

Updated On : 7 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:07 AM

ஏறு உடன் ஏழு அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக் கொண்டு
ஆறுடைச் சடையினானை அர்ச்சித்தான் அடியிணைக் கீழ்
வேறுமோர் பூக்குறைய மெய்ம்மலர்க் கண்ணை ஈண்டக்
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே

விளக்கம்

ஏறு உடன் ஏழு அடர்த்தான் = திருமால். கண்ணபிரானாக அவதாரம் எடுத்தபோது நடந்த நிகழ்ச்சியினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இவ்வாறு எருதுகளை அடக்கிய நிகழ்ச்சி பாகவத புராணத்திலும் பல திவ்யபிரபந்த பாடல்களிலும் இடம் பெறுகின்றது. நப்பின்னையை மணம் புரிவதென்றால், தன்னிடம் இருந்த ஏழு முரட்டுக் காளைகளை அடக்க வேண்டும் என்று அவளின் தந்தை விதித்தபோது, கண்ணன் அந்த ஏழு காளைகளையும் அடக்கி நப்பினையை மணம் புரிந்தான்.

Advertisement

எண்ணி ஆயிரம் பூக்கொண்டு என்ற சொற்றொடர் மூலம், சிவபிரானை வழிபட்ட திருமால் ஆயிரம் பூக்களுடன் தனது வழிபாட்டினைத் தொடங்கினார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனவே ஒரு பூ குறைந்தது சிவபிரானின் திருவிளையாடல் என்பது நமக்கு புலனாகின்றது. தசபுராணத் திருப்பதிகத்தின் (4.14) பத்தாவது பாடலில் அப்பர் பிரான், இந்த நிகழ்ச்சியை, குறைந்த ஒரு மலருக்கு பதிலாகத் தனது கண்ணினையே அர்ச்சனை செய்த திருமாலுக்கு, சிவபிரான் சக்காரம் அளித்தார் என்று குறிப்பிடுகின்றார், சிவபிரான் திருமாலுக்கு அளித்த சக்கரத்தின் திறமையும், சலந்தரனை சிவபிரான் அழித்த நிகழ்ச்சியைச் சொல்வதன் மூலம் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

தடமலர் ஆயிரங்கள் குறை ஒன்றது ஆக நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கோர் சரணே

பொழிப்புரை

வலிமைமிக்க ஏழு எருதுகளை, நப்பின்னை பிராட்டியை திருமணம் செய்து கொள்வதற்காக அடக்கிய கண்ணபிரானாக அவதாரம் எடுத்த திருமால், தான் எண்ணிவைத்த ஆயிரம் பூக்களைக் கொண்டு, சிவபிரானின் திருப்பாதங்களை அர்ச்சனை செய்யத் தொடங்கினார். இவ்வாறு, தனது சடையில் கங்கை ஆற்றினை அடக்கிய சிவபிரானை அவர் அர்ச்சித்தபோது, தான் எண்ணிவைத்த பூக்களில் ஒரு பூ குறைவதை உணர்ந்த திருமால், தனது உடலில் உள்ள தாமரை போன்ற கண் ஒன்றினை எடுத்து, அதனையே மலராக இறைவனுக்கு அர்ப்பணித்தார். வியக்கத்தக்க முறையில் வழிபட்ட திருமாலுக்கு, அனைவராலும் புகழப்படும் சக்கரத்தை அருளியவர், குறுக்கை தலத்தில் உறையும் வீரட்டர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.