38. மாது இயன்று மனைக்கு - பாடல் 9
கரிய மேகம் போன்ற நிறத்தில் உள்ள
பாடல் 9
மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானும் அவள் புக்கதே புகத்
தோகை சேர் தரு தோணிபுரவர்க்கே
ஆக யானும் அவர்க்கு இனி ஆகதே
விளக்கம்
Advertisement
முந்தைய பாடலில் தாய் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. எனவே இந்த பாடல் மகளின் கூற்றாக கருதப்படுகின்றது. மேக யானை என்பது எதுகை கருதி மாக யானை என்று திரிந்துள்ளது. மாக யானை = மேகத்தைப் போன்று கரிய நிறம் உடைய யானை. மருப்பு = கொம்பு. இங்கே யானையின் தந்தம் என்று பொருள் கொள்ள வேண்டும். தான் மட்டுமல்ல, தனது தோழியர் பலரும் சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டுள்ளதாக அப்பர் நாயகி கூறுகின்றாள்.
பொழிப்புரை
கரிய மேகம் போன்ற நிறத்தில் உள்ள யானையின் தந்தங்களை ஒத்த முலைகளை உடைய எனது தோழிகள் பலர், சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சென்ற நானும், அவரது அழகிய தோற்றத்தில் மயங்கி, அவர் மீது காதல் கொண்டுள்ளேன். தோகை மயில் போன்று அழகான தோணிபுரத்து இறைவரின் அழகில் மயங்கிய யான் அவருக்கு அடிமையாக மாறிவிட்டேன்.