40. ஆண்டானை அடியேனை - பாடல் 6
பொன்னால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்குமாறு
பாடல் 6
அறையார் பொற்கழல் ஆர்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள்
நடமாடும் அழகன் தன்னைக்
கறையார் மூவிலை நெடுவேல் கடவுள் தன்னைக் கடல்
நாகைக் காரோணம் கருதினானை
இறையானை என்னுள்ளத்து உள்ளே விள்ளாது இருந்தானை
ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே
ஆற்ற நாள் போக்கினேனே
விளக்கம்
ஏழ் பொழில் = ஏழ் உலகங்கள். அறையார் = ஒலிக்கும் தன்மை கொண்ட. கறையார் = விடம் பூசப்பட்ட. அம்பின் நுனியிலும் மற்ற ஆயுதங்களின் நுனியிலும் நஞ்சு கலந்த பூச்சு பூசப்படுவது பண்டைய வழக்கம்.
Advertisement
ஒலிக்கும் கழல்கள் என்று அப்பர் பெருமான் குறிப்பிடுவது நமக்கு, நடராஜப் பெருமான் தனது காலில் அணிந்துள்ள கழல்கள் எழுப்பிய ஒலியினை சேரமான் பெருமாள் நாயனார் கேட்குமாறு செய்ததை, நினைவூட்டுகின்றது. இந்த செய்தியை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். முறைப்படி தினமும் பூஜை செய்து வழிபட்ட, சேரமான் பெருமாள் நாயனாருக்கு, பெருமான் தனது திருவடிச் சிலம்பின் ஒலியினை கேட்கச் செய்தார் என்று கீழ்க்கண்ட பாடலில் சேக்கிழார் கூறுகின்றார்.
வாசத் திருமஞ்சனம பள்ளித்தாமம் சாந்த மணித் தூபம்
தேசில் பெருகும் செழுந் தீபம் முதலாயினவும் திருவமுதும்
ஈசற்கு ஏற்றபரிசினால் அருச்சித்தருள எந்நாளும்
பூசைக்கு அமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பின் ஒலி
அளித்தார்
பொழிப்புரை
பொன்னால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்குமாறு, அழகு நிறைந்த தில்லை அம்பலத்துள் நடனம் ஆடும் அழகனும், விடம் பூசப்பட்ட மூவிலை சூலத்தை தனது கையில் ஏந்திய கடவுளாக விளங்குபவனும், கடல் நாகைக் காரோணம் தலத்தை விரும்பித் தனது இருப்பிடமாக ஏற்றுக் கொண்டவனும், அனைவர்க்கும் இறைவனாக விளங்குபவனை, எனது உள்ளத்தில் என்றும் நீங்காது உறைபவனும், ஏழ் உலகங்களின் பாரத்தையும் தாங்குபவனாக உள்ளவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.