41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 8
ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்ட
கூரரவத்து அணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடிச்
சென்று அறியமாட்டார்
ஆர் ஒருவர் இவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம்
என்பார்க்கெல்லாம் அறியலாகாச்
சீர் அரவக் கழலானை நிழலார் சோலைத் திருப்புன்கூர் மேவிய
சிவலோகனை
நீரரவத் தண்கழனி நீடூரானை நீதனேன் என்னே நான்
நினையாவாறே
விளக்கம்
இந்த பாடலில் அயனும் மாலும் தேடி கண்டு அறியாத நிலை பற்றி கூறும் அப்பர் பிரான் அவர்கள் காணமுடியாமல் போனதற்கு காரணத்தை கூறுகிறார். அறிவோம் என்பவர்க்கு அரியவன் எனக் கூறி, அவர்கள் ஆணவத்தால் அடி முடி காண்போம் என்று முனைந்ததை, சொல்லாமல் நயமாக சொல்கிறார். ஆணவம் நீங்கி அவர்கள் பணிந்தபோது அவர்களுக்கு காட்சி கொடுத்த கருணை வள்ளல் அல்லவா நம் சிவபிரான். எனவே அவரை அறியவேண்டும் என்றால் நமது இயலாமையை அவரிடம் பணிந்து கூறி வேண்டினால் காண முடியும் என்ற செய்தியையும் இந்த பாடலில் நமக்கு அப்பர் பிரான் கூறுகிறார்.
கூர் அரவம் = அனைத்து பாம்புகளிலும் மிக்க விடத்தினை உடைய பாம்பு.
Advertisement
பொழிப்புரை
அனைத்து பாம்புகளிலும் வலிமைமிக்க ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்ட திருமாலும், குளிர்ந்த பொய்கையில் மலரும் தாமரை மலரில் உறைபவனாகிய பிரமனும் ஒன்று கூடி முயன்றபோதும் அவர்கள் இருவராலும் அடியும் முடியும் காண முடியாதபடி நீண்டு அழலாய் நின்றவன் சிவபெருமான். வல்லமை மிகுந்த திருமாலும் பிரமனும் அறிய முடியாத பெருமானின் தன்மைகளை வேறு எவர் அறியமுடியும். சிவபெருமானை அறிந்து கொள்வோம் என்று நினைக்கும் தேவர்கள் எவரும் அறியமுடியாதவனும், செம்மையான வீரக் கழல்களை காலில் அணிந்தவனும், நிழல் தரும் சோலைகள் நிறைந்த திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், ஓசையுடன் நீர் பாயும் வயல்களை உடைய நீடூர் தலத்து இறைவனும் ஆகிய பரமனை. கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.