70. நம்பனை நால்வேதம் - பாடல் 1
முக்தித் தலமாகிய காஞ்சி
முன்னுரை:
செம்பொன்பள்ளி, மயிலாடுதுறை, துருத்தி, வேள்விக்குடி கோடிகா முதலிய தலங்கள் சென்ற அப்பர் பிரான், அதன் பின்னர் திருவாவடுதுறை சென்றதாக பெரிய புராணம் கூறுகின்றது. முதல் முறையாக ஆவடுதுறை சென்றதைக் குறிக்கும் சேக்கிழாரது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிகத்தை, சேக்கிழார் பெருமான் அளவில் திருத்தாண்டகம் என்று கூறி மகிழ்வு அடைகின்றார். ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பல பதிகங்களில் முதன்முதலாக பாடிய பதிகம் என்பதாலும், பெருமானின் திருவடிகளை அடைந்து தான் உய்ந்ததை அனைவர்க்கும் கூறுவதாலும், இந்த பதிகம் பெருமை வாய்ந்த பதிகமாக கருதப்படுகின்றது. பல நாட்கள் அப்பர் பிரான் இங்கே தங்கியிருந்தார் என்று கூறுவதால், அப்பர் பிரான் மேலும் பல பதிகங்கள் இந்த தலத்தின் மீது பாடியிருக்க வேண்டும் என்ற நம்பப்படுகின்றது. இந்த தலத்திற்கு இரண்டு முறை அப்பர் பிரான் சென்றதாக பெரிய புராணம் கூறுகின்றது. ஆனால் நமக்கு இரண்டு நேரிசைப் பதிகங்களும், ஒரு குறுந்தொகைப் பதிகமும் இரண்டு தாண்டகப் பதிகங்களுமாக மொத்தம் ஐந்து பதிகங்கள் கிடைத்துள்ளன.
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்று
அளவில் திருத்தாண்டகம் முன் அருளிச் செய்து
மேவு திருக்குறுந்தொகை நேரிசையும் சத்த
விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு
பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்
தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவினோடும்
பூவலயத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிவுறு
கைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்
மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் அமைந்துள்ள இந்த தலம், பசு வடிவில் இருந்த உமையம்மை வழிபட்டு இறைவனுடன் இணைந்த தலம். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் பசு என்ற பொது பெயரால் குறிப்பிடுவது முன்னோர் வழக்கம். பதி பசு பாசம் என்று உலகில் உள்ள பொருட்களை மூன்று வகையாக திருமூலரும் பிரிக்கின்றார். பசுவாகிய ஆன்மாக்கள், தங்களது பதியாகிய, தலைவனாகிய இறைவனைச் சென்று அடைய வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணமாக, உமையம்மை இங்கே பசுவாக வந்து இறைவனை அடைந்தாள் என்று கூறுவார்கள்.
Advertisement
அடுதல் என்றால் நீக்குதல் என்று பொருள். எனவே ஆவடுதுறை என்ற சொல்லை, ஆ+அடு+துறை என்று பிரித்து, வழிபடுவோரின் பசுத் தன்மையை நீத்து அவர்களுக்கு முக்தி அளிக்கும் தலம் என்றும், இந்த தலத்தின் பெயருக்கு விளக்கம் கூறுவார்கள். வடமொழியில் கோமுத்திபுரம் என்று இதனை அழைப்பார்கள். அடு என்ற சொல்லுக்கு அடையப்பட்ட என்று பொருள் கொண்டு, பசு சென்றடைந்த தலம் என்று பொருள் கூறுவதும் பொருத்தமே. திருமூலர் வாழ்ந்து முக்தி அடைந்த இந்த தலத்தில், நால்வர் பெருமானார்களும், திருமாளிகைத் தேவர், பட்டினத்து அடிகள், நமச்சிவாய தேசிகர் ஆகிய ஞான முனிவர்களும் இறைவனை வழிபாடு செய்தனர்.
பாடல் 1:
நம்பனை நால்வேதம் கரை கண்டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னை
கம்பனைக் கல்லால் இருந்தான் தன்னைக்
கற்பகமா அடியார்கட்கு அருள் செய்வானை
செம்பொன்னைப் பவளத்தைத் திரளும் முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை ஆவடு தண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே
விளக்கம்:
நம்பன் = நம்மால் விரும்பப்படுபவன்; கம்பன் = காஞ்சி நகரத்தில் உறையும் ஏகம்பப் பெருமான்; நன்மை = நன்மைக்கு இருப்பிடமாக இருக்கும் தன்மை; கற்பகம் = வேண்டுவார்க்கு வேண்டுவதை ஈயும் தன்மை; முக்தித் தன்மை அளிக்கும் ஆவடுதுறை தலத்து இறைவனை வணங்கும் அப்பர் பிரானுக்கு, மற்றொரு முக்தித் தலமாகிய காஞ்சி நகரம் நினைவுக்கு வந்தது போலும். காஞ்சியில் வாழ்பவர் முக்தி அடைவார்கள் என்று கூறுவார்கள். காண முக்தி அளிக்கும் தலம் சிதம்பரம், பிறக்க முக்தி அளிக்கும் தலம் திருவாரூர், இறக்க முக்தி அளிக்கும் தலம் காசி, நினைக்க முக்தி அளிக்கும் தலம் திருவண்ணாமலை, இருக்க முக்தி தலம் காஞ்சி என்று முக்தித் தலங்களின் தன்மையை கூறுவார்கள். கற்றோர்களின் சிறப்பே, அந்த கல்விச் செல்வத்தை அடுத்தவர்க்கு அளித்து மகிழ்வது தான். எல்லை இல்லாத அறிவினை தன்னிடம்
வைத்துள்ள இறைவன், நான்கு வேதங்களை அருளி உலகத்தவர்க்கு நன்மை பயந்ததும் அன்றி, வேதங்களின் பொருளை தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல் தன்னை அணுகிய சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் தெளிவான உபதேசம் செய்தது அவனுக்கு மேலும் சிறப்பினைச் சேர்ப்பதாக உள்ளது. இதனை உணர்த்தும் பொருட்டு ஞானப் பெருங்கடல் என்றும் கல்லால் இருந்தான் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.
பொழிப்புரை:
நமக்கு பலவிதமான நன்மைகள் புரிவதால் நம்மால் பெரிதும் விரும்பப்படுவானும், நான்கு வேதங்களையும் கரை கண்டவனாக விளங்குபவனும், அறிவுக் கடலாக இருப்பவனும், நன்மைகளுக்கு இருப்பிடமாக உள்ளவனும், இருக்க முக்தி அளிக்கும் வல்லமை பெற்ற கச்சி நகரத்தில் உள்ள ஏகம்பம் என்று அழைக்கப்படும் தலத்தில் ஏகம்பனாக உறைபவனும், கல்லால மரத்தின் கீழே சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் உபதேசம் செய்தவனும், கற்பக மரம் போன்று தன்னை விரும்பும் அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவன அனைத்தும் ஈபவனும், செம்பொன், பவளம், திரண்ட முத்து போன்று மிகவும் அரியவனும், தீ, நீர் முதலிய ஐம்பூதங்களாகவும் திங்களாகவும் ஞாயிறாகவும் திகழ்பவனும், சிறப்பானதும் அழகு உடையதாகவும் உள்ள பொன்னாகவும் திகழும் பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.