முகப்பு
தினம் ஒரு தேவாரம்

70. நம்பனை நால்வேதம் - பாடல் 2

எங்கும் பெய்த மழை

Updated On : 9 ஆகஸ்ட், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:06 PM

பாடல் 2:


மின்னானை மின்னிடைச் சேரும் உருமினானை
        வெண்முகிலாய் எழுந்து மழை பொழிவான் தன்னைத்
தன்னானைத் தன் ஒப்பார் இல்லாதானைத்
        தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தையாகி
என்னானை எந்தை பெருமான் தன்னை இருநிலமும்
       அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடு தண்துறையுள் மேய அரன்
       அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:

Advertisement

மின்னானை = மின்னலாக இருந்து ஒளி தருபவன்; உருமு = இடி; ஒளியின் வேகத்தை விடவும் ஒலியின் வேகம் குறைவு என்பதால் நாம் மின்னலை முன்னர் காண்கின்றோம், அதன் பின்னரே இடியின் ஓசையைக் கேட்கின்றோம். எனவே இந்த வரிசை முறையை பின்பற்றி மின்னலும் முன்னமும் இடியை பின்னரும் வைத்து அப்பர் பிரான் பாடியுள்ளார். வெண்முகிலாய் மழை பொழிவான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சற்றே வியப்பினைத் தரலாம். நீர்த்திவலைகளை அதிகமாக உள்ளடக்கியதால் மேகங்கள் கருத்து காணப் படுவதையும், அத்தகைய மேகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மழை பொழிவதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வெண்முகில் என்று சொல்வதேன். நம்மைச் சற்று சிந்திக்க வைக்கும் தொடர் இது. கரு மேகங்களாக இருப்பினும், ஒன்றுடன் ஒன்று இடிப்பதால் ஏற்படும் மின்னல் ஒளியின் பின்னணியில், மேகங்கள் வெண்மை நிறத்துடன் காணப்படுவதை இங்கே குறிப்பிடும் வண்ணம் மழை பொழியும் வெண்முகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். 

இவ்வாறு அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு சுந்தரரின் திருநின்றியூர் பதிகத்தினை (7.55.2) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் ஒளிகொள் வெண்முகிலாய் பரந்து எங்கும் பெய்த மழை என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். நீர்வளம் சுருங்கி வயல்கள் காய்ந்த நிலையில் பெரு வெள்ளமாக மழை பொழிந்து அருளியதையும், வெள்ளம் வடிய வேண்டிய போது பலமாக பெய்து கொண்டிருந்த மழையினைத் தவிர்த்து அருள் புரிந்து பன்னிரண்டு வேலி நிலங்களை திருப்புன்கூர் பெருமான் பெற்றதையும் இந்த பதிகம் குறிப்பிடுகின்றது. 
    
வையகம் முற்றும் மாமழை மறந்து
       வயலில் நீர் இலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க மற்று எங்களை என்ன
       ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்து எங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
       பெயர்த்தும் பன்னிரு வேலி     கொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
       செழும் பொழில் திருப்புன்கூர் உளானே 

இறைவனின் கருணையை மழைக்கு ஒப்பிடுவது அருளாளர்கள் வழக்கம். என்னானை = எனக்கு உரியவனை. 

பொழிப்புரை:

மின்னலும், மின்னலின் இடையே தோன்றும் இடியும் சேர்ந்து ஒளிவீசும் மேகங்களை மழை பொழியச் செய்து உலகத்தவர்க்கு அருள் புரிவதைப் போன்று, கருணையே உருவான சக்தியாகிய தனது அம்சத்துடன் சேர்ந்து அடியார்களுக்கு அருள் மழை பொழிந்து அவர்களை மகிழ்விப்பானும், தனக்கு ஒப்பாக சொல்லக்கூடிய தன்மை படைத்தவர் எவரும் இல்லாததால் ஒப்பற்ற தனி ஒருவனாகத் திகழ்பவனும், உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து காப்பவனும், எனக்கு உரிமையானவனும், தந்தை காப்பது போன்று என்னை பல இடர்களிலிருந்தும் காத்தவனும், எனக்குத் தலைவனாக இருப்பவனும், பூமி மற்றும் ஆகாயம் உள்ளிட்ட ஐந்து பூதங்களாக இருப்பவனும், மாலை நேரத்து வானம் போன்று சிவந்த நிறத்து மேனியை உடையவனாய் திகழும் பெருமானும் ஆகிய ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.