71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 9
காண முடியாது
பாடல் 9:
பொன் திகழ் கொன்றை மாலை புதுப் புனல் வன்னி மத்தம்
மின் திகழ் சடையில் வைத்து மேதகத் தோன்றுகின்ற
அன்று அவர் அளக்கலாகா அனல் எரியாகி நீண்டார்
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே
விளக்கம்:
மேதகு=மேன்மை உடைய; உடன் உலகம் ஏத்த=அடி முடி காண முடியாது திகைத்த அயனும் திருமாலும் பெருமானை வேண்ட, அந்த இவர்களுடன் சேர்ந்து உலகில் உள்ள அனைவரும் பெருமானை தொழுத செயல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
பொழிப்புரை:
பொன் போன்று திகழும் கொன்றை மாலை, மற்றும் வெள்ளமாக பாய்ந்து வந்த கங்கை நதி, ஊமத்தை மலர்கள் ஆகிய பொருட்களை மின்னல் போன்று ஒளி வீசும் தனது சடையில் வைத்த பெருமான் ஏனைய தேவர்களை விடவும் மேம்பட்டுத் தோன்றுகின்றார். திருமாலும் பிரமனும், அடி முடியினை அளக்க முடியாத படி, மண்ணையும் விண்ணையும் தாண்டி நீண்ட அழல் உருவமாக நின்றவர் சிவபெருமான். தங்களது முயற்சியில் தோற்ற பின்னர், பெருமானின் மகிமையை உணர்ந்த இருவரும் அவரை துதித்து வணங்க, அந்த இருவருடன் உலகில் உள்ள மக்களும் பெருமானை வணங்கினார்கள்; இத்தகைய சிறப்பு வாந்த சிவபெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார்.
Advertisement