71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 10
முழு வலிமை
பாடல் 10:
மலையுடன் விரவி நின்று மதியிலா அரக்கன் நூக்கத்
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி
சிலை உடை மலையை வாங்கித் திரிபுரம் மூன்றும் எய்தார்
இலையுடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே
விளக்கம்:
விரவி=கலந்து; கயிலாலாய மலையினை பேர்க்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் முனைந்த அரக்கன் இராவணன் தனது முழு வலிமையையும் பயன்படுத்தி முயற்சி செய்ததை, மலையுடன் விரவி நின்றான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நூக்க=உடலினை வருத்திக் கொண்டு முயற்சி செய்ய;
இந்த பாடலில் தலைவனாக அருள் செய்ததாக அப்பர் பிரான் கூறுகின்றார். முதலில் தனது வலிமையில் செருக்கு கொண்டனவனாக, கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணன், பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய போது, ஏதும் செய்ய இயலாமல் அலறினான். பின்னர் இறைவனைப் புகழ்ந்து பாடும் சாமவேத கீதங்களைப் பாடி, இறைவனின் தொண்டர் ஆக அரக்கன் இராவணன் மாறிய பின்னர், தனது கால் பெருவிரல் அழுத்தத்தை நிறுத்திய பெருமான் அரக்கனுக்கு வரங்கள் பலவும் அளிக்கின்றார். ஒரு தலைவன், தனது தொண்டனை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதால், தலைவனாக அருள்கள் நல்கிய பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தனது தொண்டனுக்கு, தலைவனாக அருளிய பெருமான், தன்னைச் சரணடைந்த தேவர்களை காக்கும் பொருட்டு வீறு கொண்டு எழுந்த, திரிபுரம் எரித்த நிகழ்ச்சியும் இந்த பாடலில் கூறப்படுகின்றது.
Advertisement
கூற்றாயினவாறு என்று தொடங்கும் தனது பதிகத்தின் நான்காவது பாடலில் (4.1.4) அப்பர் பிரான், தன்னைச் சரணாக அடைந்த தொண்டர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒரு தலைவனின் கடமை அல்லவா என்ற கேள்வியினை எழுப்பி, தனது பழைய வினைகளின் காரணமாக தான் அனுபவிக்கும் சூலை நோயினைத் தீர்ப்பது இறைவனின் கடமை என்று கூறுகின்றார். தான் சிவபிரானுக்கு அடிமையாக மாறிய பின்னரும் சூலை நோய் தன்னை வருத்துவதை இறைவன் பார்த்துக்கொண்டு வாளா இருக்கலாமா என்ற கேள்வி இந்த பாடலில் எழுப்பப் படுகின்றது.
முன்னம் அடியேன் அறியாமையினால் முனிந்தென்னை
நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது
சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலை ஆயவர்
தம் கடன் ஆவது தான்
அன்ன நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்துறை
அம்மானே
சிவபெருமானுக்கு மீளா அடிமையாக இருந்த தான், கண்பார்வை இழந்து தவித்த பின்னரும் தனக்கு உதவி செய்யாமால் வாளா இருப்பது தலைவனாகிய உமக்கு அழகா என்று கேள்வி கேட்பது போல், வாளாக இருக்கின்றீரே என்று பெருமானை குற்றம் சாட்டும் முறையில் அமைந்துள்ள சுந்தரரின் பாடலும், தலைவனாக இருப்பவனின் கடமை, தொண்டர்களின் துயரினைத் துடைக்க வேண்டியது என்ற அடிப்படையில் எழுந்த பாடல் தான் (7.95.1).
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே
பொழிப்புரை:
தனது வலிமை அனைத்தையும் ஒருங்கே திரட்டி, அறிவிழந்த நிலையில் அரக்கன் இராவணன் தனது வழியில் கயிலை மலை குறுக்கிட்டது என்று தவறாக கருதி, இறைவன் வாழும் கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தான். அதனை உணர்ந்த பெருமான் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்ற, அரக்கனின் பத்து தலைகளும் மலையின் கீழே மாட்டிக்கொண்டு நசுங்கின. தனது நிலையினை உணர்ந்த அரக்கன், இறைவனைப் புகழ்ந்து சாமவேத கீதங்கள் பாட, பெருமான் தனது கால் பெருவிரலை மெல்ல எடுத்து, அரக்கனுக்கு பல அருள்கள் அருளினார், இவ்வாறு, ஒரு தலைவனாக தனது தொண்டனுக்கு அருள் செய்த பண்பினை உடைய பெருமான், மேரு மலையினை வில்லாக வளைத்து ஆகாயத்தில் தங்களது விருப்பம் போன்று பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் ஓரே அம்பினை விடுத்து அழித்தவராவார். இவ்வாறு கருணை மற்றும் வீரம் ஆகிய இரண்டும் ஒருங்கே பொருந்திய தலைவனாகிய பெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் சிவபெருமான் ஆவார்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் காடுடை சுடலை நீற்றர் என்று நிலையான பொருள் சிவபெருமான் ஒருவர் தான் என்றும், உலகத்தின் அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னரும் எஞ்சியிருப்பது சிவபெருமான் ஒருவர் தான் என்றும் நமக்கு உணர்த்திய அப்பர் பிரான், அடுத்த பாடலில் முந்தைய பழமைக்கும் பழமையானவர் சிவபெருமான் என்று உணர்த்துகின்றார். இவ்வாறு முதல் இரண்டு பாடல்களில், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் பெருமான் இருக்கும் நிலை உணர்த்தப்படுகின்றது. பதிகத்தின் மூன்றாவது பாடலில், நீதியே உருவமாக இருக்கும் பெருமான் என்று கூறும் அப்பர் பிரான், அடுத்த பாடலில் உயர்ந்ததாக கருதப்படும் தேவர் உலகத்தினை விடவும் மேம்பட்ட சிவலோகத்தில் உறைகின்றார் என்று கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் மற்றும் ஏழாவது பாடலில் அடியார்களின் மேல் படர்ந்துள்ள வினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தவன் என்றும், ஆறாவது பாடலில் பாம்பு சந்திரன் மற்றும் கங்கை நதி ஆகியோருக்கு இடையே இருந்த பகைமையைத் தீர்த்து ஆண்ட பரமன் என்றும் எட்டாவது பாடலில் பலராலும் புகழப்படும் தன்மையும், ஒன்பதாவது பாடலில் பிரமனும் அரியும் காணாத முறையில் அழலாக நீண்ட சிறப்பும் நமக்கு அப்பர் பிரானால் உணர்த்தப் படுகின்றன. பதிகத்தின் கடைப் பாடலில் தலைவன் என்ற முறையில் தொண்டர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்யும் கருணை உள்ளம் கொண்டவன் என்பதை உணர்த்துகின்றார். இவ்வாறு இறைவனின் பெருமைகளை அறிந்து கொண்ட நாம், அவனை வணங்கி, நமது வினைகள் தீர்க்கப் பெற்று வாழ்வினில உய்வினை அடைவோமாக.