முகப்பு
தினம் ஒரு தேவாரம்

72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 3

அனுபவிக்கும் போகமாகவும்

Updated On : 6 ஜனவரி, 2018 at 3:03 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:13 PM

பாடல் 3:
    கொன்றை மாலையும் கூவிள மத்தமும்
    சென்று சேரத் திகழ் சடை வைத்தவன்
    என்றும் எந்தை பிரான் இடை மருதினை
    நன்று கை தொழுவார் வினை நாசமே

விளக்கம்:
திகழ்=பொலிவுடன் விளங்கும்; காசிக்கு சமமாக சொல்லப்படும் ஆறு தமிழ்நாட்டுத் தலங்களில், இடைமருது ஒன்றாகும். மற்ற தலங்கள், சாய்க்காடு, மயிலாடுதுறை, வாஞ்சியம், வெண்காடு மற்றும் ஐயாறு ஆகும். எனவே, தலத்தின் சிறப்பு கருதி இங்கே வழிபடும் அடியார்கள் தங்களது வினைகள் நீக்கப்பட்டு இன்பம் அடைவார்கள் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.  

இந்த பாடலில் என்றும் எந்தை பிரான் என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்படுகின்றார். சைவ வேளாள குடியில் அவதரித்த அப்பர் பிரானின் பெற்றோர்கள் இருவரும் பெருமான் பால் சிறந்த அன்பு கொண்டவர்களாக விளங்கியதை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். எனவே இந்த சூழ்நிலையில் வளர்ந்த அப்பர் பிரான், பெருமானை தனது தந்தையாக கருதியதில் வியப்பு ஏதும் இல்லை. அவ்வாறு தான் கருதியதை திருப்பாதிரிப் புலியூர் தலத்து பதிகத்தின் முதல் பாடலில் அவர் குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். ஏன்றான்=ஏற்றுக் கொண்டவன்; இறைவன் தனது மனதினை உறைவிடமாக ஏற்றுக் கொண்டவன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.  

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் என் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்
                                                                                    அடியோங்களுக்கே
 

Advertisement

துறவுநிலை பூண்டதால் சுற்றம் ஏதும் இல்லாத அப்பர் பிரான், சிவபிரானையே தனக்கு அனைத்துச் சுற்றங்களாக காண்பதை கீழ்க்கண்ட பாடலில் (6.95.1) நாம் காணலாம். தான் அனுபவிக்கும் போகமாகவும், தன்னை உய்விக்கும் பொருளாகவும், தனக்குத் துணையாகவும், தனது செல்வங்களாகவும் சிவபிரானையே அப்பர் பிரான் காண்கின்றார். துறப்பித்தல் என்றால் உலகச் சுற்றங்களைத் துறக்கச் செய்தல் என்று பொருள்.
    
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய
                                                          மாமனும்
மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும்
                                                          சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய்
                                                          என் நெஞ்சத்து துறப்பிப்பாய் நீ 

இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன்
                                                           நீ ஏறூர்ந்த செல்வன் நீயே

தனது தந்தையாகவும் தாயாகவும் அப்பர் பிரான் இறைவனைக் கருதுவது, நமக்கு மணிவாசகரின் பிடித்த பத்து பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. தாய் தந்தையர்களின் உறவினால் நமக்கு கிடைக்கும் இந்த உடல், எத்துணை சிறந்ததாக அமையினும், நமது பழைய பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகைகளுக்கு ஏற்ப பொருத்தப் பட்ட உடலாகும். அதே உடல் இறைவன் தந்த வாழ்வாக விளங்கும் போது, வினைகள் நீக்கப்பட்ட உடலாக மாறிவிடுகின்றது. எனவே, தன்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டு தனக்கு பெருந்துறையில் உபதேசம் அளித்து, பிறவிக் கடலிலிருந்து கரையேற உதவிய பெருமானை அம்மை என்றும் அப்பன் என்று அழைத்து, மணிவாசகர் மகிழ்வதை நாம் இந்த பாடலில் உணரலாம்.      
    
    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
                      அன்பினில் விளைந்த ஆரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
                      புழுத்தலைப் புலையனேன் தனக்கு
    செம்மையே ஆய சிவபதம் அளித்த
                      செல்வமே சிவபெருமானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
                      எங்கு எழுந்து அருளுவது இனியே

பொழிப்புரை:
கொன்றை மாலை, வில்வ மாலை, ஊமத்தை மலர்கள் ஆகியவற்றைத் தனது சடையில் மிகுந்த அழகுடன் பொலிந்து விளங்குமாறு வைத்தவன் சிவபெருமான். என்றும் எனக்கு தந்தையாக விளங்கிய சிவபெருமானை, இடைமருது தலத்தில் உறையும் பெருமானை, நல்ல முறையில் தங்களது கைகளினால் தொழும் அடியார்களின் வினைகள் நாசமாது திண்ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.