53. கொள்ளும் காதன்மை - பாடல் 11
கயிலை மலையினை பேர்த்து எடுக்க
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும்
வரத்தினான் மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக் கட்டு அறும் காண்மினே
விளக்கம்
பருத்த = வலிமையால் பருத்த. இருத்தினான் = இருக்கச் செய்தவன். வரத்தினான் = வரங்கள் அருளியவன். கட்டு அறும் = நம்மைப் பற்றியுள்ள பழவினைக் கட்டுகள்.
Advertisement
பொழிப்புரை
கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் ராவணனது பருத்து காணப்பட்ட வலிமையான தோள்களும் முடிகளும், மலையின் கீழே அழுந்தி பொடிப் பொடியாக சிதறும் நிலைக்குத் தள்ளிய இறைவன், ராவணன் தான் செய்த தவற்றுக்கு வருந்தி சாம கானம் பாடி பெருமானை மகிழ்வித்தான். அந்த இன்னிசையை கேட்ட பெருமான், அரக்கனுக்கு நீண்ட வாழ்நாளும், ராவணன் என்ற பெயரினையும் சந்திரஹாசம் எனப்படும் வாளையும் வரமாக அருளினான். இவ்வாறு தான் இருந்த இடத்தினையே பேர்க்கத் துணிந்த அரக்கனுக்கும் அருள் புரிந்த பெருமான் மயிலாடுதுறையில் உறைகின்றார். அவரைத் தங்களது கரங்களால் வழிபடும் அடியார்களைப் பற்றியுள்ள வினைகள் முற்றிலும் நீங்கும்.
முடிவுரை
பதிகத்தின் முதல் இரண்டு பாடல்கள் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல்கள். மயிலாடுதுறையில் உறையும் பெருமான் பால் காதல் கொண்டு வருந்தும் தனது மகளின் நிலைக்குத் தீர்வு காண வேண்டும் தாயின் கூற்றாக அமைந்த பாடல்கள். அகத்துறை வகையில் அமைந்த பாடல்களாயினும், இந்த இரண்டு பாடல்களும் ஆன்மாவின் விருப்பத்தை, பெருமானின் திருநாமத்தை எப்போதும் சொல்ல வேண்டும், மேலும் அவனுடன் ஒன்றி இருக்க வேண்டும் என்ற விருப்பங்களை, வெளிப்படுத்தும் பாடலாக கருதப்படுகின்றன. நாமும் ஆன்மாவின் தாகத்தை புரிந்து கொண்டு, அந்த தாகத்தினை தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவோமாக. பதிகத்தின் மூன்றாவது பாடலில் தொண்டர்களின் சிறப்பு கூறப்படுகின்றது. பதிகத்தின் ஆறாவது பாடலில் அவனது அருளில் திளைக்கும் இன்பம் உணர்த்தப்படுகின்றது. பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் அவனது திருக்கோலத்தின் அழகும், எஞ்சிய பாடல்களில் இறைவனைச் சார்வதால் ஏற்படும் பயனும் உணர்த்தப் படுகின்றன. பதிகத்தின் நான்காவது பாடலிலிருந்து இறைவனைச் சார்வதால் ஏற்படும் பயன்களைச் சொல்லிய வண்ணம் பாடல்கள் அருளிய அப்பர் பெருமான், இறைவனைச் சார்வதால் நமக்கு நன்மை ஏற்படும் என்ற எண்ணத்தினை வலியுறுத்தும் வண்ணம், ஒரு பாடலை அதிகமாக கொடுத்து பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாக அருளினார் போலும். முக்தி அளிக்கும் தலமாக கருதப்படும் மயிலாடுதுறையினில் உறையும் பெருமானை வணங்குவதால், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்ற செய்து பதிகத்தின், நான்காவது, ஐந்தாவது மற்றும் ஏழாவது பாடல்களில் கூறப்படுகின்றது.