54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 1
அப்பர் பிரான் திருத்துருத்தி சென்றதாக
(துருத்தி – நேரிசை)
முன்னுரை
திருச்செம்பொன்பள்ளி மற்றும் மயிலாடுதுறை தலங்களில் இறைவனை தரிசித்து, பதிகங்கள் பாடி துதித்த பின்னர், அப்பர் பிரான் திருத்துருத்தி சென்றதாக பெரியபுராணம்
Advertisement
கூறுகின்றது. பதிகத்தின் பாடல்கள் தொண்டனேன் கண்டவாறே என்று முடிகின்றன. பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் மட்டும் தொண்டனேன் என்ற சொல்லுக்கு பதிலாக
நான் என்று கூறுகின்றார். இந்த தலத்தின் இறைவனை, தான் மனக்கண்ணால் கண்ட கோலத்தை அப்பர் பிரான், தொண்டனாகிய தான் எவ்வாறு கண்டேன் என்று
பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் விவரிக்கின்றார். பதிகத்தின் பல பாடல்களில் உலக மாயையில் ஆழ்ந்து விட வேண்டாம் என்று அறிவுரை கூறும் அப்பர் பிரான்,
பெருமானை எப்போதும் புகழ்ந்து பாடுங்கள் என்றும் நமக்கு அறிவுரை கூறுவதை நான் உணரலாம்.
பாடல் 1
பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத
வேண்டா
இருத்தி எப்பொழுதும் நெஞ்சுள் இறைவனை ஏத்துமின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையுள்
வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டவாறே
விளக்கம்
குரம்பை = உடல். பொருந்திய = எலும்பு, தோல், தசை, நரம்பு இவை பொருந்திய. பொருள் = நிலையான பொருள். இருத்தி = நிலை நிறுத்தி. பொருந்திய குரம்பை என்பதற்கு ஐந்து பொறிகள் பொருந்திய உடல் என்று பொருள் கொண்டு, ஐந்து பொறிகளும் தரும் சிற்றின்பத்தை நிலையானது என்று கருத வேண்டாம் என்று அறிவுரை கூறுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.
தனது உடலை, சீ கோர்த்து அழுக்கோடு திரியும் சிறிய குடிசை என்று மணிவாசகர் கூறும் பாடல் ஆசைப் பத்து பதிகத்தின் மூன்றாவது பாடலாகும். தனது உடல் சிதைந்து, விரைவில் தான் பெருமானின் திருவடிகளில் சென்று சேர வேண்டும் என்று விரும்பும் அடிகளார், உடலின் இழிவான தன்மையை இங்கே குறிப்பிடுகின்றார். ஆனால் தனது வாழ்வு முடியும் நாளினை மாற்ற முடியாது எனற உண்மையை உணர்த்தார் போலும், தனது உடலை சிதைத்து உடனே தன்னை பெருமானை அழைத்துக்கொள்ளாவிட்டாலும், தனது முகத்தினை நோக்கி ஆ ஆ என்று சொல்ல வேண்டும் என்று தான் ஆசைப் படுவதை இந்த பாடலில் வெளிப்படுத்துகின்றார்.
சீ ஆர்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் இது
சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குருமணியே
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி
ஆவா என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
பொழிப்புரை
மாந்தர்களே, எலும்பு தோல் தசை நரம்பு ஆகியவை பொருந்திய உடலினை நிலையானது என்றும் உடல் தரும் சிற்றின்பத்தை நிலையானது என்று கருதி உலகியல் வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு வாழும் வாழ்க்கையை தவிர்த்துவிடுவீர்களாக. உங்களது நெஞ்சினில் எப்பொழுதும் இறைவனைப் பற்றிய சிந்தனையை வளர்த்து, அவனைப் புகழ்ந்து பாடியவாறு இருப்பீர்களாக. துருத்தி தலத்தில் ஞானச்சுடராக விளங்கும் பெருமானை, நான் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாதியிலும், கங்கை நங்கையைத் தனது சடையிலும் வைத்த கோலத்தில் கண்டேன். நீங்களும், இறைவனின் எப்பொழுதும் நினைத்து வாழ்ந்தால், இறைவனின் கோலத்தை காணலாம்.